இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே பதவியை ராஜினாமா செய்தார்.
கேப்டன் வீராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகினார். தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் இல்லாமல் விளையாடி வருகிறது.
இரு அணிகளும் மோதும் 3-வது ஒருநாள் போட்டி இன்று ஆண்டிகுவாவில் நடக்கிறது. இப்போட்டி குறித்து வீராட் கோலி பேட்டி அளித்த போது புதிய பயிற்சியாளர் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் கூறியதாவது:-
பயிற்சியாளர் விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் எந்த தகவலையும் என்னால் சொல்ல முடியாது. ஒரு அணியாக எங்களது கருத்துக்களை கிரிக்கெட் வாரியம் கேட்டு கொண்டதால் தெரிவித்து இருக்கிறோம்.
அணியில் எந்த பாகுபாடும் இல்லை. பயிற்சியாளர் தேர்வு முறையை நாங்கள் மதிக்கிறோம். புதிய பயிற்சியாளர் பற்றி கிரிக்கெட் வாரியம் கேட்டு கொண்டால் பரிந்துரை செய்வோம்.
தற்போது எங்கள் கையில் வெஸ்ட் இன்டீஸ் தொடர் இருக்கிறது. அதில் தான் முழு கவனம் செலுத்தி வருகிறோம். பயிற்சியாளர் தேர்வை கிரிக்கெட் வாரியம் செயல்படுத்தி வருகிறது. முழு அதிகாரம் கிரிக்கெட் வாரியத்திடம் தான் இருக்கிறது.
நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் தொடரை தவிர வேறு எந்த விஷயத்திலும். கவனம் செலுத்தவில்லை. தொடரை வெல்ல தயாராகி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.