சான்பிரான்சிஸ்கோ:
உலகின் முதல் ஐபோன் ஜூன் 29, 2007-இல் வெளியிடப்பட்டது. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கைகளால் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் வரலாற்றில் இத்தகைய வரவேற்பை பெறும் என ஸ்டீவ் ஜாப்ஸ் உள்பட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
பத்து ஆண்டு வரலாற்றில் ஸ்மார்ட்போன் தரம், அதன் விற்பனை, லாபம் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆப்பிள் ஐபோன்கள் தொடர்ச்சியான சாதனைகளை படைத்து வருகிறது. முதல் ஐபோன் வெளியான நாளில் இவை உருவாக்கப்பட்ட முக்கிய காரணமாக இருந்தவரை பற்றி தான் இங்கு தொகுத்துள்ளோம்.
கம்ப்யூட்டர் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகத்தில் முன்னாள் ஐஒஎஸ் தலைவரான ஸ்காட் ஃபோர்ஸ்டால், ஐபோன்கள் கடந்த வந்த பாதை மற்றும் இவை உருவாக்கப்பட முக்கிய காரணமாக இருந்தவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனருக்கு பிடிக்காத மைக்ரோசாஃப்ட் ஊழியர் தான் ஐபோன்கள் உருவாக்கப்பட முக்கிய காரணமாம். ஒவ்வொரு முறை இந்த மைக்ரோசாப்ட் ஊழியரை பார்த்ததும், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆத்திரத்துடன் வருவார் என ஸ்காட் கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் ஊழியரின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் இவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவியின் நண்பர் என்று மட்டும் தெரிவித்துள்ளார். இவர் மைக்ரோசாரப்ட் நிறுவனத்தின் டேப்லெட் மற்றும் ஸ்டைலஸ்களை திட்டமிடுபவராக பணியாற்றியுள்ளார். மைக்ரோசாப்ட் ஊழியரை ஸ்டீவ் ஜாப்ஸ் அவரது வழியிலேயே வீழ்த்த நினைத்தார்.
குறிப்பிட்ட மைக்ரோசாப்ட் ஊழியர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இடம் டேப்லெட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் இடம் இருந்து வாங்கி உலகையே மாற்றலாம் என தெரிவித்துள்ளார். இதில் கோபமுற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் உண்மையில் டேப்லெட் எவ்வாறு இருக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும் என தெரிவித்ததாக வால்டர் ஐசக்சன் எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டைலஸ் சாதனத்தை அடியோடு வெறுத்த ஸ்டீவ், ஒருவருக்கு பத்து விரல்கள் இருக்கும் போது தனியே ஸ்டைலஸ் எதற்கு என நினைத்தார். இதைத் தொடர்ந்து ஐபேட்களின் வடிவமைப்பு பணிகள் துவங்கின, சில காலத்திலேயே ஸ்மார்ட்போன்கள் மிகப்பெரிய திட்டமாக இருக்கும் என நினைத்தார்.
மேலும் ஐபாட் வியாபாரத்திற்கு அச்சுறுத்தலாக இது அமையலாம் என்பதால் ஏற்கனவே தயாரிப்பில் இருந்து வரும் சாதனத்தை பாக்கெட்டில் எளிமையாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றாக மாற்ற திட்டமிட்டார், மேலும் இதில் ஆப்பிள் ஏற்கனவே உருவாக்கி வரும் மல்டி டச் அம்சத்தை வழங்கும் முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக டேப்லெட் தயாரிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு, பிரத்தியேக போனினை உருவாக்கும் பணிகள் துவங்கின. அன்று துவங்கிய பணிகள் இன்று வரை தொடர்கிறது. தற்சமயம் உலகமே ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கும் ஐபோன் 2017 மாடலை உருவாக்குவதில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
புதிய ஐபோன் வெளியீட்டிற்கு சில மாதங்கள் உள்ள நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோனினை வெளியிட்ட நிகழ்ச்சி வீடியோவை கீழே காணலாம்.