இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில்தான் அதிக அளவில் குழந்தைகள் பிறப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஒரு வருடத்தில் பிறக்கும் மொத்த குழந்தைகளில் ஆகஸ்ட்-நவம்பர் வரையிலான காலத்தில் மட்டும் 37 சதவிகித குழந்தைகள் பிறந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே, ஜூன் மாதங்களிலும், அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் அதிக அளவில் குழந்தைகள் பிறப்பதாக புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. 2015-16ஆம் ஆண்டில் பிறந்த 21.2 மில்லியன் குழந்தைகளில் 85 சதவிகித குழந்தைகளின் பிறப்பு அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு இதுகுறித்த கணக்கீடு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
குழந்தை பிறப்பு
ஒரு வருடத்தில் பிறக்கும் மொத்த குழந்தைகளில் ஆகஸ்ட்-நவம்பர் வரையிலான காலத்தில் மட்டும் 37 சதவிகித குழந்தைகள் பிறக்கின்றன. ஆண்டின் முதல் பாதியில் 46.3 சதவிகித குழந்தைகளும், இரண்டாம் பாதியில் 53.7 சதவிகித குழந்தைகளும் பிறக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 9.35 சதவிகித குழந்தைகள் பிறக்கின்றன என்று தெரியவந்துள்ளது.
டெல்லி குளிர்
இதுகுறித்து “டிரெய்ன்டு நர்சஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா” அமைப்பின் பொது மேலாளார் ஈவ்லைன் கண்ணன் கூறும்போது ” டெல்லியைப் பொறுத்த வரையில் குளிர் காலங்களில் தான் அதிக திருமணங்கள் நடைபெறுகிறது. அதிலிருந்து பத்து மாதங்களுக்கு பின்பு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதை அறிய முடிகிறது. இது டெல்லிக்கு மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் இப்படித்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
எந்த மாதத்தில் எவ்வளவு?
இந்தியாவில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 1.77 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதம் 1.94 மில்லியன் குழந்தைகளும், செப்டம்பர் மாதம் 1.98 மில்லியன் குழந்தைகளும் பிறக்கின்றன. அக்டோபர் மாதம் 1.95 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன. நவம்பர் மாதம் 1.91 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பிறப்பு
தமிழகத்தைப் பொறுத்த வரையில் மே மாதத்தில் 8.87 சதவிகித குழந்தைகளும், ஜூன் மாதத்தில் 8.70 சதவிகித குழந்தைகளும் பிறந்துள்ளதாக கூறுகிறது அந்த புள்ளி விபரம். அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் 9.02 சதவிகித குழந்தைகள் பிறந்துள்ளனர்.
குறைந்தபட்சமாக பிப்ரவரி மாதத்தில் 7.24 சதவிகித குழந்தைகள் பிறந்துள்ளனர். நவம்பர் மாதத்தில் 8.83 சதவிகித குழந்தைகளும் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மாநிலங்கள்
தென்னிந்தியாவில் சராசரியாக மே, ஜூன் மாதங்களில் அதிக அளவில் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆந்திரா மாநிலத்தில் மே மாதத்தில் 8.81 சதவிகிதம் குழந்தைகள் பிறந்துள்ளன. ஜூன் மாதத்தில் 8.83% குழந்தைகள் பிறந்துள்ளனர். செப்டம்பர் மாதம் 8.80%, அக்டோபர் மாதம் 8.35% நவம்பர் மாதம் 8.97% குழந்தைகளும் பிறந்துள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது.