தமிழக தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், “ஜி.எஸ்.டி. அமலாகும் சமயத்தில், மாநில அரசின் உள்ளாட்சி வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம் 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 3ஆம் தேதி முதல் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும்.
இதை தொடர்ந்து முன்பதிவை ஏற்கனவே ரத்து செய்துவிட்டோம். நாளையும், நாளை மறுதினமும் கவுண்டர்களில் ஏற்கனவே உள்ள கட்டணத்தை வசூலிக்க இன்றைய கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்.
ஜி.எஸ்.டி வரியை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விதிக்கப்படும் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்க்கிறோம். கேரளாவைப் போன்று தமிழக அரசும் இந்த வரியை விலக்கிக் கொள்ளவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
தியேட்டர்களில் ரூ.100-க்கு விற்கப்படும் டிக்கெட், நாளை முதல் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து ரூ.120-க்கு விற்கப்படும். ரூ.120 டிக்கெட், ரூ.153-க்கு விற்கப்படும் என தெரிகிறது.