கர்ப்பிணியாக இருக்கும்போது உதைத்து கொடுமைப்படுத்தினார்: வங்கதேச வீரர் மீது மனைவி குற்றச்சாட்டு

வங்காள தேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷாஹித். 28 வயதாகும் ஷாஹித் வங்காள தேச அணிக்காக ஐந்து டெஸ்ட் மற்றும் ஒரு டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கும் ஃபர்சானா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ஃபர்சானாவை ஷாஹித் தொடர்ந்து துன்புறுத்து வருவதாக ஃபர்சானாவின் உறவினர் டாலு கஷி புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து டாலு கஷி கூறுகையில் ‘‘இருவருக்கும் கடந்த வருடம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், ஷாஹித் அந்த குழந்தையை தன்னுடைய குழந்தை என்று ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், வழக்கத்திற்கு மாறாக என்னுடைய சகோதரிக்கு அதிக அளவில் தொந்தரவு கொடுத்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அவருடைய நாராயண்கஞ்ச் வீட்டின் மேற்கூரையில் இருந்து தள்ளிவிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். ஆகவே, ஃபர்சானா ஷாஹித்தின் வீட்டில் இருந்து அவளது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்’’ என்று கூறியுள்ளார்.

நான் கர்ப்பிணியாக இருந்தபோது ஷாஹித், என்னை உதைத்து துன்புறுத்தினார் என்று .ஃபர்சானா கூறியுள்ளார்.

மேலும் ஷாஹித் கொடுமை குறித்து ஃபர்சானா கூறுகையில் ‘‘நான் கர்ப்பிணியாக இருந்தபோது ஷாஹித் என்னை காலால் உதைத்தார். அவர் என்னை அதிக அளவில் துன்புறுத்தினார். நான் ஷாஹித்தை திருமணம் முடிக்கும்போது, அவரது குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. அவர்களிடம் தங்கம் வாங்கும் அளவிற்கு வசதி இல்லை. இதனால் வெள்ளி வாங்கி கொடுத்தார்கள்.

முதல் இரண்டு ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். தற்போது ஷாஹித்திற்கு ஏராளமான பெண்களுடன் தொடர்பு உள்ளது. 2-வது பிறந்த குழந்தையை ஏற்க மறுக்கிறார். அது அவருடைய குழந்தை இல்லை என்கிறார்’’ என்று கூறியுள்ளார்.