பகவத் கீதையையும் பிள்ளையாரையும் விண்வெளிக்கு கொண்டு சென்று சாதனைகள் படைத்த பெண்!

விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையைக் கொண்டவர் கல்பனா சாவ்லா. இவர் நாசாவில் பணியாற்றியவர்.

2003ஆம் ஆண்டு விண்வெளிப்பயணம் ஒன்றில் ஈடுபட்டு, பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.

பல சாதனைகளையும் பெருமைகளையும் தம் வசம் கொண்ட கல்பனாவிற்கு பிறகு மீண்டும் ஒரு இந்திய வம்சாவளிப் பெண் விண்வெளியில் சாதனைகளைப் புரிந்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் என்ற இந்திய வம்சாவளியான அமெரிக்க விண்வெளி வீராங்கனையே இவ்வாறு பெருமைப்படுத்தப்படுகின்றார்.

இவர் விண்வெளி வீராங்கனை மட்டுமல்லாது அமெரிக்க கப்பல் படை அதிகாரியும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் ஒரே தடவையில் 195 நாட்களை விண்வெளியில் கழித்த பெண் என்ற சாதனையை கொண்டுள்ளார்.

மேலும், விண்வெளியில் 7 தடவைகள் நடந்ததன் மூலம், அதிக தடவைகள் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையும் இவருக்கு உண்டு.

அத்துடன் விண்வெளியில் 50 மணி 40 நிமிடங்கள் என்ற நீண்ட நேரம் நடந்ததன் மூலம், நீண்ட நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனைகளையும் இவர் புரிந்துள்ளார்.

ஏப்ரல் 2006 இல், டிஸ்கவரி விண்வெளிக்கலத்தில் வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.

இதன்போது, பகவத் கீதை புத்தகம், ஒரு பிள்ளையார் படம் மற்றும் சில சமோசாக்கள் போன்றவற்றையே தன்னுடைய சொந்தப் பொருளாக விண்வெளிக்கு இவர் எடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஏப்ரல் 16, 2007ஆம் ஆண்டு விண்வெளி நிலையத்தில் இருந்து பாஸ்டன் மராத்தான் ஓடிய முதல் நபர் என்னும் பெருமையை வில்லியம்ஸ் பெற்றார் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

கல்பனா சாவ்லாவிற்கு பிறகு விண்வெளிப்பயணத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த பெண் என்ற பெருமையினையும் இந்திய வம்சாவளிப் பெண்ணான சுனிதா எல். வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.