இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய 3 நாடுகளின் எல்லை பகுதி ஒன்றிணையும் இடம் சிக்கிம் மாநிலத்தில் உள்ளது.
டோகாலா என்று அழைக்கப்படும் இந்த இடம் சிக்கிம் மாநிலத்தின் உள்ளடக்கிய பகுதியாக இருக்கிறது. இங்கு இந்திய ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள நாதுலா கனவாய் வழியாகத்தான் திபெத்தில் உள்ள கைலாய மலைக்கு இந்திய பக்தர்கள் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு முதல் யாத்திரை கடந்த வாரம் தொடங்கியது. ஆனால், அவர்களை நாதுலா கனவாய் வழியாக செல்வதற்கு சீனா அனுமதி மறுத்து விட்டது.
டோகாலா பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று ஏற்கனவே சீனா கூறி வந்தது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
தற்போது மீண்டும் இந்த பகுதி தங்களுக்கு தான் சொந்தம் என்று கூறி அங்குள்ள இந்திய ராணுவத்தை வெளியேறும்படி சீனா வற்புறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சீனா புதிதாக ஒரு வரை படத்தை வெளியிட்டுள்ளது. அதில், டோகாலா பகுதி சீனாவின் உள்ளடங்கிய பகுதி போல குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரை படம் மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு உரிய நட வடிக்கை மேற்கொள்ள ஆலோசித்து வருகிறது.
டோகாலா பகுதியில் உள்ள மற்ற இடங்கள் பூட்டானுக்கு சொந்த மானதாகும். அந்த இடங்களில் சீனா அத்து மீறி சாலைகளை அமைத்து வருகிறது. இதற்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூகாங் கூறும் போது, டோகாலா பகுதி வரலாற்று காலத்தில் இருந்தே சீனாவுக்கு சொந்தமானது.
இந்த பகுதியில் பூட்டான் மக்கள் ஆடு- மாடுகளை மேய்த்து கொள்ள அனுமதி பெற்றிருந்தனர். இப்போது அவர்கள் உரிமை கொண்டாடுவது தவறானது என்று கூறினார்.
சீனாவின் நடவடிக்கைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனாவின் தற்போதைய செயல்பாடுகள் அதிக கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இது சம்பந்தமாக எங்களது எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறோம். ஏற்கனவே இருக்கின்ற நடைமுறைகளை மாற்ற முயற்சிப்பது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்.
எனவே தற்போதுள்ள நிலைமை தொடர வேண் டும் என்று வற்புறுத்தி இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.