கிரகங்களின் ஓரை தரும் பலன்கள்

பொதுவாக ஒரு சுபகாரியம் தொடங்குவதற்கும், திருமணம், புதிய கட்டிட வேலை ஆகியவற்றுக்கும் பெரியவர்கள் ஓரை பார்த்து செய்வது நல்லது என்பார்கள். ‘ஹோரா’ என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்தது தான் தமிழில் ‘ஓரை’ என்றாகி விட்டது. ஓரை என்பது ஒரு மணி நேரத்தை குறிக்கும். இந்த ஓரையில் ஒவ்வொரு கிரகங்களின் பலன் இருக்கும். அதில் சுப கிரகங்கள் என்று அழைக்கப்படும் சந்திரன், புதன், குரு, சுக்ரன் ஆகிய 4 கிரகங்களின் ஓரை பார்ப்பது அவசியம்.

அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் ஓரைகளில் எந்த சுபகாரியங்களும் செய்யக் கூடாது என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரிய ஓரை: இது ஒரு அசுப கிரகம். இந்த ஓரையில் துன்பம் ஏற்படும். வாகன விபத்துகள், காயங்கள் உண்டாகக்கூடும். ஆதலால் இந்த ஓரையின் போது எந்த நற்காரியங்களிலும் ஈடுபடக்கூடாது.

சந்திர ஓரை: இது நற்பலனை தரும் கிரகம். சந்தோஷத்தையும், சவுபாக்கியத்தையும் தரும். இந்த கிரகத்தின் போது நற்காரியங்களை மேற்கொள்ளலாம்.

செவ்வாய் ஓரை: இது யுத்தம், சண்டை, செல்வ அழிவு, நோய் ஆகியவற்றை உண்டாக்கும். இதுவும் நற்காரியத்துக்கு ஏற்றதல்ல.

புதன் ஓரை: புதன் என்றாலே புத்திரர்களால் மகிழ்ச்சி கிட்டும். கல்வி சம்பந்தமான நற்காரியங்களுக்கு இந்த ஓரை பார்ப்பது நல்லது.

குரு ஓரை: குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இந்த ஓரையில் தொடங்கும் நற்காரியம் வெற்றியில் முடியும். நல்ல லாபம் கிடைக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

சுக்ர ஓரை: மங்களம் தரும். திருமணம், நட்பு, காதல் புரிவதற்கு இது உகந்ததாகும். இதனால் பெரியவர்கள் பொதுவாக திருமணம் உள்ளிட்ட இல்லற சம்பந்தமான காரியங்களை இந்த சுக்ர ஓரையில் நடத்த விரும்புவார்கள்.

சனி ஓரை: இது ஒரு அசுபகிரகம். சிறை வாசம், சண்டை, எதிரிகளால் துன்பம் போன்றவை ஏற்படும். எனவே தான் இந்த கிரக ஓரையின் போது எந்த காரியங்களும் செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கிறார்கள்.

பொதுவாக எந்த நற்காரியம் செய்யத் தொடங்கினாலும், அது வளர்பிறையா? சுப கிரக ஓரை வருகிறதா? என்று தினசரி காலண்டரில் பார்த்து செய்யத் தொடங்குவது நல்லது.