இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் என்பன தொடர்பில் மதிப்பீடு செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் மூன்று விசேட நிபுணர்கள் இவ்வருடம் இலங்கை வரவுள்ளனர். அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயற்குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளது.
அந்தவகையில் மனித உரிமையை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான விசேட நிபுணர் ஒருவர் இம்மாதம் இலங்கை வரவிருக்கிறார்.
அத்துடன் சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான விசேட அறிக்கையாளர் ஒருவரும் மற்றும் உண்மை, நீதி நட்டஈடு, மீள்நிகழாமை தொடர்பான விசேட நிபுணர் ஒருவரும் இவ்வருடத்தில் .இலங்கைக்கு வரவுள்ளனர்.
மேலும் பலவந்தமாக தடுத்துவைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவும் இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இவ்வருடம் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் பிரகாரமே இலங்கை அரசாங்கம் இவ்வாறு ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்களுக்கும் செயற்குழுவுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற 35 ஆவது கூட்டத் தொடரின் அமர்வு ஒன்றின் போது உரையாற்றிய இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இலங்கையில் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை முன்னெடுக்கும் நோக்கில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதிய அரசியலமைப்பின் நகல்வரைபானது எதிர்வரும் மாதங்களில் நிறைவடையும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கடந்த இரண்டரை வருடங்களாக ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஐ.நா. முறைமையுடன் பாரிய ஈடுபாட்டை கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்துடனும் பயனுள்ள வகையில் நாம் செயற்பட்டு வருகின்றோம். இந்த ஆரோக்கியமான ஈடுபாடானது மனித உரிமையை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும் மற்றும் நல்லாட்சிக்குமான செயற்பாடுகளுக்கும் சிறந்தவகையில் ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகிறோம் என்றும் ரவிநாத ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.