முன்னைய அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக் ஷ செய்த அநாவசிய செயற்பாடுகளே தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளன.
மஹிந்த ராஜபக் ஷ செய்த தவறுகளுக்கு ஜனாதிபதியும் பிரதமருமே பொறுப்பு கூறவேண்டியுள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தவறாக மேற்கொண்ட வேலைத்திட்டம் மூலமாக இன்று பண்டாரவளை நகரம் முழுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 7 ஆயிரம் தொடக்கம் 8 ஆயிரம் வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது
தற்போது உமாஓயாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் வழமையாக ஒரு சுரங்க வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் போது ஏற்படும் பிரச்சினையாகும். இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன.
கொத்மலை திட்டம் ஆரம்பிக்கும் போதும், மேல் கொத்மலை திட்டம் உருவாக்கப்பட போதும் சமனல ஆறு திட்டத்திலும் இந்த பிரச்சினைகள் எழுந்தன. ஆனால் ஏனைய திட்டங்கள் போல உமாஓயா திட்டத்தை கூற முடியாது. இது முழுமையாக அரசியல் வாதிகளின் தனிப்பட்ட தேவைக்காகவே நடந்தேறியது.
உமாஓயாவின் தண்ணீர் மகாவலி கங்கைக்கே சென்றது. ரந்தனிகளை, ரன்தெம்பை நீர்த்தேக்கங்களை இலக்கு வைத்து கொண்டுசெல்லப்பட்டது. இந்த தண்ணீரை மெதமுலனைக்கு கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டமையே பிரதான பிரச்சினையாகும்.
அனுராதபுரம், பொலநறுவை பகுதிகளுக்கு வழங்க வேண்டிய நீரை பண்டாரவளை ஊடாக மெதமுலனைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தமையே இன்று பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்போது இந்த திட்டம் வேண்டாம் என அரசாங்கத்தில் இருந்த பலர் தெரிவித்தோம். ஆனால் நாம் விடுத்த எச்சரிக்கையை சிறிதளவும் கவனத்தில் கொள்ளாது அவர் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்தார்.
இந்த திட்டத்தை முன்னெடுக்கும் பணி ஈரானுக்கு வழங்கப்பட்டது. அதுவும் உண்மையில் இதற்கு செலவாகும் நிதியை விடவும் நான்கு மடங்கு அதிகரிப்பில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் மோசமாக முன்னெடுத்த தொழிநுட்ப திட்டங்கள் மூலம் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
முழுமையாக தவறான முறையில் மேற்கொண்ட வேலைத்திட்டம் மூலமாக இன்று பண்டாரவளை நகரம் முழுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 7 ஆயிரம் தொடக்கம் 8 ஆயிரம் வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னைய தலைவர் செய்த தவறுக்காக இப்போதைய தலைமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதில் எந்த பலனும் இல்லை. தவறிழைத்த மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்தே போராடவேண்டும். அவர் செய்த குற்றங்களுக்கு ஜனாதிபதியும் பிரதமருமே பொறுப்புக் கூறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்