கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை சராசரியாக 10 முதல் 13 கிலோ வரை அதிகரிக்கும். இந்த எடை அதிகரிப்பு குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியமானதாகும். பிரசவத்தின்போது குழந்தையின் எடையோடு சேர்ந்து 4 கிலோ வரை எடை இழப்பு ஏற்படும். கர்ப்ப காலத்துக்கு முன்பு இருந்து வந்த எடைக்கு மீண்டும் திரும்ப பெண்கள் மெனக்கெடுவார்கள்.
சீரற்ற உணவு கட்டுப்பாடு, சத்தில்லாத ஆகாரங்கள் உண்பது, உடல் உழைப்பு இல்லாதது போன்றவை எடை அதிகரிப்புக்கு காரணங்களாகும். எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக உணவின் அளவை ரொம்பவும் குறைத்து விடக் கூடாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சத்துள்ள உணவுகளை தேவையான அளவு சாப்பிட்டு வர வேண்டும்.
பச்சிளம் குழந்தையை எப்படி வளர்த்து ஆளாக்கப்போகிறோம் என்ற கவலையில் எழும் மன அழுத்தம், பசி மறந்து குழந்தையை பராமரிப்பதில் காட்டும் அக்கறை போன்றவை எதிர் விளைவுகளை ஏற்படுத்தி உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகிவிடும். பால், தயிர், பீன்ஸ், பருப்புகள், மீன், முட்டை, தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதில் இருக்கும் புரத சத்துக்கள் தாய்-சேய் இருவருடைய உடல் நலனுக்கும் நன்மை சேர்க்கும். ஒமேகா-3 கொண்ட கொழுப்பு அமில உணவுகள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் வலுவடைய உதவும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அவை தாயின் உடல் எடை குறைவதற்கும் வழி வகுக்கும்.
சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து மிதமான சுடுநீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தும். உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். பால் பருகுவதும் எலும்புகளை வலுவாக்கும். சுகப்பிரசவம் ஆன பெண்கள் 3 வாரங்களுக்கு பிறகு எளிதான உடற்பயிற்சிகளை செய்ய பழகிக்கொள்ள வேண்டும். குழந்தை பராமரிப்புக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி தினமும் பயிற்சியை தொடர வேண்டும்.
போதுமான நேரம் தூங்கவும் வேண்டும். பிரசவத்திற்கு பிறகு ஆழ்ந்து தூங்கி ஓய்வு எடுக்கும் பெண்களின் உடல் எடை குறைய தொடங்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நன்கு தூங்கி எழுந்தால் குழந்தையை சோர்வின்றி கவனிப்பதற்கு ஏதுவாக உடல் நலனும் மேம்படும்.