முரண்பாடு முற்றியதால் ஆசிரியர்கள் இடமாற்றம்

sl-9-1

புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட நவகத்தேகம ஆரம்ப வித்தியாலயத்தில் சேவையாற்றும் ஆசிரியையால், அதே பாடசாலையைச் சேர்ந்த இளம் ஆசிரியை அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆங்கில பாடம் கற்பிக்கும் இளம் ஆசிரியையே இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப பிரிவில் கடமையாற்றும் ஆசிரியையே அச்சுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த ஆசிரியை, நவகத்தேம மகா வித்தியாலயத்தில் 20 வருடங்கள் சேவையாற்றிய பின்னர், 2012ஆம் ஆண்டு, ஆரம்ப பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், கற்பித்தல் நடவடிக்கையின் போது ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இளம் ஆசிரியையின் ஆடைகளை களைந்து, இரண்டு கைகளையும் வெட்டி விடுவதாக அச்சுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதனையடுத்து, புத்தளம் பிரதி காவற்றுறைமா அதிபர் காரியாலயத்தில் இது குறித்து இளம் ஆசிரியை முறைப்பாடு செய்துள்ளார்.

அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியை, தனியார் வகுப்பு நடத்தி வருவதுடன், இளம் ஆசிரியை பாடசாலை முடிந்ததும் மேலதிக வகுப்புகளை நடத்துவதால், தனது தனியார் வகுப்பு பாதிக்கப்படுவதன் காரணமாக, பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு செயற்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியைகளுக்கு ஏற்பட்ட முரண்பாடு பெரிதான நிலையில், பிரச்சினைக்கு காரணமான ஆசிரியை இருவர் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஆசிரியர் இருவரை, உடனடியாக வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய, வடமேல் மாகாண கல்வியமைச்சர் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.