உலகிலே மிகவும் நீளமான ஆறு, அகலமான ஆறு பற்றி கேள்விப்பட்டிருப்போம். உலகிலே அழகான ஆறு பற்றி அறிந்திருக்கிறோமா?
அதுதான் இந்த கேனோ கிரிஸ்டலெஸ் ஆறு.
நம் கற்பனையில் கூட இப்படி ஒரு படைப்பை யூகிக்க முடியாது. அதை நிஜத்தில் பார்த்தால் அந்த நிமிடங்கள் நமக்கு எப்படி இருக்கும்?
பெருங்குழிகளும் கரடுமுரடான வழிகளுமாக நீண்டு செல்லும் பாறைப் படுகையில், கண்ணாடி போன்று பளபளவென ஓடும் தெளிந்த நீருக்கடியில், சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, ஆரஞ்சு என செறிந்த பல வண்ண மலர்கள் மற்றும் நீர்தாவரங்களையும் சேர்ந்து ரசிப்பதே, இந்த இயற்கை தலத்தின் திவ்ய வெளிப்பாடு. அரிதான ஒரு தரிசனம்.
உலகில் எங்கும் காணாத அப்படி ஒரு அழகியலுக்காகவே ’நீர்ம வானவில்’ (Liquid Rainbow) என்ற பெயர் தனிபுகழாய் இந்த நதியை தழுவி நிற்கிறது.
கொலம்பியாவில் சியாரா டி லா மெகெரினா என்ற பகுதியில் இந்த ஆறு ஓடுகிறது. வருடத்தின் பெரும்பாலான காலங்களில் நீர் நிறைந்து காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புதிய துடிப்போடு, புதிய நிறத்தோடு இந்த மலர்கள் வெடித்து பூத்து குலுங்குவதால், வற்றாத அழகுக்கு சுற்றுலா பயணிகளுக்கு உத்திரவாதம் வழங்குகிறது.
ஆனாலும், குளிர் காலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இடையில் அதாவது செப்டம்பரிலிருந்து நவம்பர் வரையிலான சில வாரங்கள் மட்டும் ஆற்றின் நீர்நிலை குறைகிறது.
அதுதான் இயற்கையின் சூட்சமம், நீருக்கடியில் உள்ள அல்கைட் இன பாசியான மெகரேனிய கிளேவிஜெரா மீது சூரிய ஒளி தாராளமாய் படுவதால், அவை வெடித்து வேகமான வளர்ச்சியடைகிறது.
அதனால், அந்த குறுகிய பருவத்தில் புதிய வண்ணங்களில் புதிய துடிப்போடும், செழிப்போடும் வளர்ந்து மிக அதிகமாக அற்புதமாக காட்சியளிக்கிறது.
பயணிகளை அந்த இடத்தைவிட்டு விலகாத மனநிலைக்கு கொண்டுசெல்கிறது. அந்த சமயத்தில் வரும் பயணிகளுக்கு கண்ணுக்கு இனிய விருந்துதான்.
சிவப்பிலேயே பத்துவகையான நிறமளிக்கிறது. நிழல் சூழ்ந்த நீர்நிலைகளில் பளிச்சிடும் பச்சையாக வளர்ந்துள்ளது. இதுபோல, ஒவ்வொரு நிறத்திலுமே பல அடர்த்திகளில் மலர்கள் உள்ளதால் வானவில்லாக காட்சியளிக்கிறது.
இந்த ஆற்றின் பாதையே, பூமியில் பாறைகவசம் பதித்ததுபோல நீண்ட தூரத்துக்கு அமைந்திருப்பது மேலும் சிறப்பு., அந்த பாறை கால்வாய்கள் பாய்ந்து செல்லும் நீரை தெளிந்து காட்டுவதே ஒரு இனிய அனுபவிப்புதான்.
அதன் இருமருங்கிலும் செழுமையான பசுமை அதற்கு மேலும் இனிமை.
இந்த அழகிய கிரிஸ்டலெஸ் ஆற்றை ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு நீண்டகாலமாக தடைபோடப்பட்டிருந்தது. காரணம், கொலம்பியாவின் கேனோ கிரிஸ்டலெஸ் பகுதி நகரத்திலிருந்து மிக தொலைவில் இருப்பது, அதை அடைவதற்கு சரியான சாலைவசதிகள் அமைக்கப்படாமலும் விடப்பட்டிருந்தது.
மேலும், அது கொலம்பியாவின் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் இருந்தது, அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பதாலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அதோடு, அதிக சுற்றுலா பயணிகளின் வருகையால், அதன் இயற்கைதன்மை மாசுபடும் என்பதாலும் தடைசெய்யப்பட்டிருந்தது.
ஒரு நல்ல சுற்றுலாதலத்தை மக்கள் பார்வைக்கு இருட்டடிப்பு செய்ய வேணாம் என நினைத்தார்களோ என்னவோ, 2009 ம் ஆண்டிலிருந்து பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்போது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு இன்ப சுற்றுலாவாக செல்கின்றனர்.
கொலம்பியாவிலிருந்து லா மெகரினா செல்ல சகல வசதிகளுடன் ஏற்பாடு செய்யும் பல சுற்றுலா நிறுவனங்களே அங்கு உருவாகி இருக்கின்றன. கேனோ கிரிஸ்டலெஸ் இருக்கும் இடத்தில் தேசிய பூங்காவும் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.