புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க அடுத்த சில தினங்களில் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ தளபதியாக பதவி வகித்த லெப்டினட் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வா, ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டதுடன் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு முறை பணி நீடிப்பு வழங்கப்பட்ட அவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெறவுள்ளார்.
இராணுவத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் மஹேஷ் சேனாநாயக்கவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெறவுள்ளதுடன் புதிய பதவியில் நியமிக்கப்பட்ட பின்னர், பணி நீடிப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இவரை தவிர மேலும் இரண்டு மேஜர் ஜெனரல்களின் பெயர்கள் இராணுவ தளபதி பதவிக்கு பேசப்பட்டு வருகிறது.
கடந்த 1981 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து கொண்ட மஹேஷ் சேனாநாயக்க கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவராவார்.
யாழ்ப்பாண கட்டளை தளபதியாக பதவி வகித்த சேனாநாயக்கவுக்கு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்திற்கு பின்னர் இராணுவத்தில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என இராணுவத்தின் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், மஹேஷ் சேனாநாயக்க இராணுவத்தில் சட்டத்தை மதிக்கும் இராணுவ உறுப்பினர்கள் மத்தியில் அதிக நன்மதிப்பை பெற்ற அதிகாரி எனக் குறிப்பிடப்படுகின்றது.