உமாஓயா பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும்: அரசுக்கு ஜே.வி.பி. எச்சரிக்கை

உமாஓயா பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சரவை உபகுழு தனது தீர்வை தெரிவிக்காவிட்டால் இன்று முதல் மீண்டும் தங்களது போராட்டம் ஆரம்பமாகுமென மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உமாஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும், அரசு வழக்கம்போல தீர்வுகள் என்ற போர்வையில் இந்தப் பிரச்சினையை மூடி மறைக்கவோ அல்லது இழுத்தடிக்கவோ முயன்றால் அதற்கான பின்விளைவுகளை உடனடியாக சந்திக்க வேண்டி நேரிடும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

சரியான ஆராய்ச்சிகள் செய்யப்படாமல் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்தத்திட்டத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்களும், தோட்டங்களும் பாரியஅச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.