வழிநடத்தல் குழுவில் இருந்து மஹிந்த அணி விலகியிருக்க முடிவு!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் வரையில், புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள வழிநடத்தல் குழுவிலிருந்து ஒதுங்கியிருப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த அரசு தேர்தலை நடத்தாது காலத்தை இழுத்தடித்துச் செல்கின்றது. தேர்தலை நடத்தாமல், அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு அரசு முயற்சிக்குமாக இருந்தால் நாம் அதனை எதிர்ப்போம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் வரையில் வழிநடத்தல் குழுவில் இருந்து ஒதுங்கியிருப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய அரசமைப்பில் சமஷ்டிதான் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று மறைமுகமாகக் கூறியுள்ளார்.மக்கள் சமஷ்டிக்கு ஆணை வழங்கவில்லை.

எனவே, மக்கள் ஆணை வழங்காத ஒன்றை நிறைவேற்ற முயற்சித்தால் நாம் அதனை எதிர்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.