இவ்வருடம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறாது?

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மைத்திரி அரசால் மேலும் மூன்று மாதங்களுக்கு பின்போடப்பட்டிருப்பதால் அந்தத் தேர்தல் இவ்வருடத்தில் நடக்கும் சாத்தியம் தென்படவில்லை என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு சாக்குபோக்குகளைக் கூறி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது.

2017 ஏப்ரல் 7ஆம் திகதி மாகாண சபைகள்மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2017 ஜூலை முதலாம் திகதிமுதல் கோரப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும்,2017 ஜூன் 30ஆம் திகதி அவரால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி 23 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 271 பிரதேச சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் 2017 ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் கோரப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்டமூலத்தின் திருத்தங்கள் தொடர்பான சுருக்கப் பிரேரணை ஏற்கனவே நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் முஸ்தபா இப்போது கூறி வருகின்றார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் 2017 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் கோரப்படுமென தனக்கு தெரிய வந்திருப்பதாகவும், அது தொடர்பில் தான் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பதாகவும் தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார்.

பல்வேறு தரப்புகளிலும் இவ்வாறான இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதால் உள்ளூராட்சிசபைத் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.