பாடசாலைக்கு செல்லாது ஊர் சுற்றிய மாணவிகளின் நிலை

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து காலி பேருந்து நிலையத்திற்கு அருகில் சுற்றித் திரிந்த இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

காலி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் சிறுமிகளிடம் நடத்திய விசாரணைகளில் அவர்கள் கடுமையாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாத்தறை கும்புறுப்பிட்டிய பகுதியை சேர்ந்த 14 மற்றும் 11 வயதான இந்த சிறுமிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் என தெரியவந்துள்ளது.

இந்த சிறுமிகள் கடந்த 20ம் திகதி பாடசாலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளனர்.

பின்னர் வேறு ஒரு இடத்திற்கு சென்று ஆடைகளை மாற்றிக்கொண்டு கும்புறுப்பிட்டிய பேருந்து நிலையத்திற்கு வந்து அக்குரஸ்ஸ நகருக்கு சென்றுள்ளனர்.

அங்கு சுற்றித் திரிந்து விட்டு மாலை 6.30 அளவில் பேருந்தில் ஏறி கும்புறுப்பிட்டியவுக்கு திரும்பி வந்துள்ளனர்.

வீதியில் நடந்து சென்ற இந்த சிறுமிகளை கண்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி பாழடைந்த கறுவாத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள குடிசையில் வைத்து சிறுமிகளை கடுமையாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

அந்த நபர் மறுநாள் சிறுமிகளை கும்புறுப்பிட்டிய நகருக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார்.

வீட்டுக்கு திரும்பிச் செல்லாத இந்த சிறுமிகள் மீண்டும் காலி நகருக்கு வந்து சுற்றித் திரிந்த போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்களை மீட்டு விசாரணை நடத்தியதில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பிள்ளைகளின் பெற்றோர் காலி பொலிஸ் நிலையத்திற்கு வந்து விடயங்களை கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கும்புறுப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பாக கூடிய அக்கறை செலுத்த வேண்டும் எனவும் இதன் மூலமே பிள்ளைகள் சீரழிந்து போவதை தடுக்க முடியும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பெற்றோர் தமது பிள்ளைகள் எங்கு செல்கின்றனர், என்ன செய்கின்றனர் என்பது குறித்து உன்னிப்பாக அவதானித்து வரவேண்டும்.

அறியாத வயதில் இருந்தும் பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டியது பெற்றோர் மற்றும் பெரியவர்களின் கடமை எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.