இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகள் பெற்றுள்ளதால் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது.
அடுத்த மூன்று போட்டிகள் ஹம்பன்தோடாவில் நடக்கிறது. 3-வது போட்டி 6-ந்தேதியும், 4-வது போட்டி 8-ந்தேதியும், ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி 10-ந்தேதியும் நடக்கிறது.
ஹம்பன்தோடா மைதானம் கடந்த 2009-ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதைய அதிபராக இருந்த ராஜபக்சேயின் சொந்த ஊர் ஹம்பன்தோடா என்பதால், அங்கு இந்த மைதானம் கட்டப்பட்டது.
கொழும்பில் இருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த மைதானம், இலங்கையின் ரிமோட் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் யானைகள் சரணாலயம் உள்ளது. இதனால் யானைகள் வழிதவறி மைதானத்திற்குள் வந்துவிடக்கூடாது என்பதில் அதிக போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்துவதில்லை.
தற்போது மூன்று போட்டிகள் நடத்தப்பட இருப்பதால், யானைகள் எல்லையைத் தாண்டி மைதானத்திற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்கான 10 வார்டன்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் யானைகள் சரணாலயத்தை விட்டு வெளியேறிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.
35 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கக்கூடிய வசதிப்படைத்த இந்த மைதானத்தில், யானைகள் அச்சுறுத்தல் இருப்பதால் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சரணாலய கம்பிகளை உடைத்தெறிந்து மைதானத்திற்குள் யானைக்கூட்டம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.