வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் மாணவி மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வலய மட்ட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் தொவித்துள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் பாடசாலை ஒன்றில் கடந்த 22ஆம் திகதி குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் பதின்மூன்று வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவிற்குட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு பாடசாலை மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
குறித்த சம்பவத்தினை நிரூபிப்பதற்கு முடியவில்லை. எனினும் மேலதிக விசாரணைகளுக்கு குறித்த மாணவியின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கும் மாணவியின் பெற்றோர்கள் முறைப்பாடுகள் மேற்கொள்ள முன்வரவில்லை.
எனவே பாடசாலை மட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் தற்காலிகமாக குறித்த ஆசிரியரை வலய மட்ட விசாரணைகளுக்காக கடமையில் இருந்து இடைநிறுத்தி வைத்திருப்பதாகவும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் ஆசிரியர் மீது கருணைகாட்டும் எண்ணம் இல்லையெனவும் இருந்தபோதிலும் நடைபெற்ற சம்பவத்தினை நிரூபிக்கமுடியவில்லையெனவும் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.