தேர்தல் திருத்தம் தவிர அரசியலமைப்பில் வேறு எந்தவொரு திருத்தமும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. புதிய அரசியலமைப்புக்கு பெளத்த பீடம் முழுமையாக எதிர்ப்பை தெரிவிக்கின்றது என்று அஸ்கிரிய மகாநாயக பீடம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு தொடர்பில் அரசியல் வாதிகளின் கருத்துக்களில் நம்பிக்கை இல்லை. புதிய அரசியல் அமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகாநாயக்க தேரர் பீடமும் ஒன்றுகூடி போராடவேண்டிய நிலைமை வரும் எனவும் அஸ்கிரிய மகாநாயக்க பீடம் குறிப்பிட்டுள்ளது.
புத்தசாசன அமைச்சின் பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் இரவு அஸ்கிரிய மகாநாயக தேரர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு புதிய அரசியல் அமைப்பில் பெளத்த மத பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பிலேயே ஆனமடுவே தம்மதாச அனுநாயக தேரர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்த நாட்டில் இதுவரை இருந்த அரசியல் அமைப்பில் எந்த முரண்பாடுகளும் இல்லை. எனினும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுமாயின், மாற்றம் வேண்டும் என தெரிவிப்பதாயின் தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமே தவிர வேறு எந்தவொரு மாற்றமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவது மற்றும் ஒருசில முக்கிய விடயங்கள் தவிர்த்து புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதற்க பெளத்த மதத் தலைவர்கள் முழுமையாக எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். புதிய அரசியலமைப்புக்கு நாம் முழுமையாக எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். ஜனாதிபதி முறைமை அவசியம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இந்த நாட்டில் இருக்க வேண்டும். மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் அது தேர்தல் திருத்தங்களில் மாத்திரம் கொண்டுவர வேண்டும்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புதிய அரசியலமைப்பு திட்டத்தை முன்வைப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இதில் அனைவரதும் கருத்துக்கள் எவ்வாறு உள்வாங்கப்பட்டன என்பது தெரியவில்லை. இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகாநாயக தேரர் பீடமும் ஒன்றுகூடி போராடவேண்டிய நிலைமை வரும். இப்போது இவர்களின் பயணம் எவ்வாறானது என்பது எமக்கு தெரிகின்றது.
புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஆரம்பத்தில் மகாநாயக தேரர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேபோல் அரசாங்கத்தின் ஒருசில விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இந்த விடயங்களை நாம் நல்ல எடுத்துக்காட்டாக கொண்டு தொடர்ந்தும் எமது நிலைப்பாட்டில் இருந்து செயற்படவுள்ளோம்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஒவ்வொரு அரசியல் வாதிகளும் கூறும் கருத்துக்கள் மற்றும் ஒவ்வொரு தலைவர்களும் எம்மிடம் வந்து கூறும் கருத்துக்கள் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. அரசாங்கம் எதைக் கூறினாலும் இந்த நாட்டில் பெளத்த சிங்கள மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவே நாம் தெளிவான நிலைபாட்டில் இருந்து எமது கருத்துக்களை முன்வைத்துவருகின்றோம் என்றார்.