மலையகத்திற்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்

malayakam

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.

உத்தேச அரசியல் அமைப்புத் திருத்தங்களின் ஊடாக மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வடக்கு, கிழக்கை ஒன்றிணைப்பதற்கும் காணி அதிகாரங்களை வழங்குவதற்கும் ஆதரவளிக்கப்படும் எனவும், பொலிஸ் அதிகாரங்கள் மாகாணத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார் என கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் அமைப்புச்சபை அமர்வுகளிலா அல்லது வேறும் சந்தர்ப்பத்திலா இவ்வாறு முத்து சிவலிங்கம் கோரினார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, அரசியல் அமைப்புச் சபையின் இணைக்குழுவிற்கு நான்கு சிறு கட்சிகள் தங்களது யோசனைத் திட்டங்களை முன்வைத்துள்ளன.

ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இவ்வாறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.