மஹிந்தவுக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்த போது சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவுடன் பேசியிருந்தால் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்கும்.
அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை போலியாக அணுகியதால் தான் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
புதிய கூட்டமைப்பின் ஊடாக நாம் தமிழ், முஸ்லிம் மக்களின் உள்ளங்களை வெல்வதற்கு அவர்களை எம் பக்கம் வளைத்துப் போடுவதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம்.
வடக்கு, கிழக்கில் இளம் தலைவர்களை உருவாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அவ்வாறானவர்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். எதிர்காலத்தில் அவர்கள் யார் என்று சொல்வோம்.
எமக்கு சில அரசியல் தலைவர்களுடன் மாத்திரம்தான் பிரச்சினை உண்டு. அவர்கள் எமது கொள்கைகளுடன் ஒத்துப்போக மறுக்கின்றனர்.
உதாரணத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. எமது ஆட்சியில் அவர்களால் மிக இலகுவாக வந்து மஹிந்தவுடன் பேசும் வாய்ப்பிருந்தது.
தமிழர்களின் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருந்தது. தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை.
அப்படி இருந்திருந்தால் மஹிந்தவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் நாடாளுமன்றில் இருந்த போது சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்த போது மஹிந்தவுடன் பேசி தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றிருப்பார்கள்.
ஆனால், அவர்கள் மஹிந்தவிடம் வரவில்லை. அவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதாகக் கூறினாலும் உண்மையில் அவர்கள் அப்படி இல்லை.
அவர்களின் அரசியல் இருப்புக்காகவே இவ்வாறு செய்கின்றனர். வாகனத்தையும் சலுகைகளையும் கொடுத்தால் அமைதியாகி விடுகின்றனர்.
அவர்கள் நேர்மையானவர்கள் அல்லர். இவ்வாறில்லாது தமது இனத்துக்காக உண்மையாகவே குரல் கொடுக்கின்ற இனவாதமற்ற நாட்டுப்பற்றுள்ள இளம் தலைவர்களை நாம் வடக்கு, கிழக்கில் உருவாக்கவுள்ளோம்.
இதற்கான வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.