நடிகர் தாடி பாலாஜிக்கு கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பொலிசார் வழக்கு

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தாடி பாலாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல் போக்கு காரணமாக அவரது மனைவி நித்யா கடந்த மே மாதம் 23 ஆம் திகதி சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

குறித்த புகாரில் கணவர் பாலாஜி, தன்னை சாதி பெயர் சொல்லி திட்டுவதாகவும், அடித்து உதைப்பதாகவும் தமது நடத்தை மீது சந்தேகிக்கிறார் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி யூலை 1ம் திகதி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது மீண்டும் புகார் அளித்தார் நித்யா.

அந்த புகாரில், “எனக்கும் நடிகர் பாலாஜிக்கும் திருமணம் நடந்தது. ஒரு மகள் இருக்கிறார். நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.

எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு வந்து என்னை சித்ரவதை செய்வார். அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதை மறைத்து என்னை திருமணம் செய்தார். நான் தினமும் ஜிம்முக்கு போவேன்.

இதனால் நடத்தையில் சந்தேகப்பட்டார். தினமும் நான் வேலைக்கு செல்லும் போதும், ஜிம்முக்கு செல்லும் போதும் என்னை ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணிப்பார்.

நான் பணிபுரியும் அலுவலகத்துக்கு குடிபோதையில் வந்து என்னைப் பற்றி பேசி அவமானப்படுத்தினார். இது உயர் அதிகாரிகள் மத்தியில் எனக்கு அவமானமாக இருந்தது.

சமீபத்தில் என்னை அவர் தாக்கினார். இதனால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறி இருந்தார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு நித்யா பேட்டியும் அளித்திருந்தார்.

இந்த நிலையில் கமிஷனர் உத்தரவின் பேரில் நித்யாவின் புகார் மாதவரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் மாதவரம் பொலிசார் தாடி பாலாஜி மீது,

பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் நடிகர் தாடி பாலாஜி கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.