மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெருசலேம் விமான நிலையத்தில் சிகப்பு கம்ளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பென் குரியான் விமான நிலையத்துக்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.
இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மோடி, இந்த பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும். இஸ்ரேலுடன் வலிமையான அசைக்க முடியாத நட்புறவை ஏற்படுத்துவதே எனது வருகையின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி, ஜெருசலேமில் உள்ள டேன்சிகர் பூ பண்ணைக்கு வருகை புரிந்தார். அங்கு இஸ்ரேலில் வேகமான வளர்ச்சியை பெற்று வரும் புதிய மலர் ஒன்றுக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இஸ்ரேலின் கிரைசாந்துமன் வகையைச் சேர்ந்த பூ ஒன்றுக்கு `மோடி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும் இந்தியா – இஸ்ரேல் இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது குறித்தும் விவாதிக்க உள்ளனர்.
யூத தேசத்திற்கு பயணம் புரியும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.