வடகொரியாவின் மிரட்டலை முறியடிக்க தயாராக இருக்கிறோம்: அமெரிக்க ராணுவ தலைமையகம்

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சோதனை செய்யும் வடகொரியா, சமீபத்தில் புதிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது.

வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா பரிசோதித்தது. இந்த சோதனையை அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் நேரில் பார்வையிட்டதோடு, அமெரிக்கர்களுக்கு சுதந்திர தின பரிசு என தெரிவித்திருந்தார்.

வடகொரியாவுக்கு பதிலளிக்கும் விதமாக பேட்டியளித்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் டானா ஒயிட், “வடகொரியாவின் வளர்ந்துவரும் அச்சுறுத்தலுக்கு எதிராக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள திறன்களை முழு அளவில் பயன்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.” எனக் கூறினார்.

மேலும், “எங்கள் நட்பு நாடுகளான, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டில் மாற்றம்
இல்லை. எவ்வித அச்சுறுத்தலையும் முறியடிக்க தயாராக இருக்கிறோம்” எந்த் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான உரசலால் சில மாதங்களாக அமைதி நிலவி வந்த கொரிய தீபகற்பத்தில், தற்போது மீண்டும் போர்ப் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.