டெம்போ ஓட்டி பிழைப்பு நடத்தும் இந்திய வீரர் பும்ராவின் தாத்தா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஷ்பிரித் பும்ரா 20 ஓவர் பந்து வீச்சு தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதற்கு அவரது துல்லியமான பந்துவீச்சும், யார்க்கரும் காரணம். உலகளவில் கிரிக்கெட்டில் புகழ்பெற்றுக் கொண்டிருக்கும் பும்ராவின் தாத்தா, டெம்போ ஓட்டி பிழைப்பு நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பும்ராவின் தாத்தா சந்தோக் சிங் பும்ரா. இவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் பகுதியில் ஒரு டெம்போ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவர் பும்ராவின் தந்தையோடு இணைந்து சொந்தமாக மூன்று தொழிற்சாலைகள் நடத்தி வந்துள்ளார். தொழில் நன்றாக முன்னேறிய காலகட்டத்தில் கடந்த 2001-ம் ஆண்டு அவரது மகன் ஜஸ்விர் மரணம் அடைந்துள்ளார். அதன் பின்னர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து மூன்று தொழில்சாலைகளையும் விற்றுவிட்டு அகமதாபாத்தில் இருந்து உத்தம்சிங் நகர் சென்று நான்கு டெம்போக்கள் வாங்கி தொழில் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் அதிலும் நஷ்டம் ஏற்படவே மூன்று டெம்போக்களை விற்றுவிட்டு ஒரு டெம்போவை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
84 வயதான அவர், தனது பேரன் (பும்ரா) சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்த்து வருவதாகவும், அவரை கட்டித்தழுவி வாழ்த்த ஆசை என்றும் கூறியுள்ளார். மேலும், உலகளவில் தனது பேரன் புகழ்பெற்றது குறித்து மிகுந்த பெருமையடைவதாகவும் கூறியுள்ளார்.