ஆஸ்டின் நகரிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று, தொடுதிரை கைபேசிகள் (ஸ்மார்ட் போன்கள்) நமது நினைவாற்றலை மெல்லக் கொல்லும் என்ற அதிர்ச்சிகரமான உண்மையைக் கண்டறிந்துள்ளது. நாம் இந்தக் கைபேசிகளைப் பயன்படுத்த வேண்டுமென்பதுகூட இல்லை; அவை நம் அருகில் இருந்தாலே, நமது நினைவுத்திறன் தேவையற்று வீணாகுமாம்.
இந்தக் கைபேசிகள் நமது சூழலில் இருக்கும்போது, நாம் அவற்றைப் பற்றி நினைக்காமல் இருக்கவே முயற்சிப்போம். அந்த முயற்சியிலேயே நமது மூளையின் ஆற்றல், சிறிதளவு வீணாகும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களை, அவர்களது கைபேசியின் சத்தத்தைக் குறைத்து, சைலண்ட் மோடில் வைக்கச் சொல்லி விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டனர். பிறகு அவர்களுக்கு, மற்றொரு அறையில் கணினியில் ஒரு தேர்வு நடந்தது. கலந்து கொண்டவர்களில் சிலர், தங்கள் கைபேசியை அடுத்த அறையிலேயே விட்டுவிட்டு வந்திருந்தனர். சிலரோ தங்கள் சட்டைப் பையில் வைத்திருந்தனர். அடுத்த அறையில் தங்கள் கைபேசியை வைத்துவிட்டு வந்தவர்களே, தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றனர்.
இந்த வகையான ஆய்வில், நூற்றுக்கணக்கான மனிதர்களைத் தொடர்ந்து ஈடுபடுத்தி கைபேசிகளை கவனிக்காமலிருக்க நாம் செய்யும் முயற்சியில், நம் மூளைத் திறன் வீணாகிறது என்பதை உறுதி செய்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
எனவே, ஸ்மார்ட் போன்களை நமது தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வதும், பயன்படுத்தாத பொழுதுகளில் அதை நமது சுற்றுவட்டாரத்திலேயே இல்லாதவாறு பார்த்துக் கொள்வதும், நமது மூளைச் சக்தியை பாதுகாத்துக் கொள்ள உதவும்.
ஸ்மார்ட்போன்கள் மனிதனை அடிமையாக்கி வைத்திருக்கின்றன. உபகரணமானது மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர, மனிதன் உபகரணத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது.
தேவைக்கு மட்டும் இவ்வகை போன்களை பயன்படுத்துவதே நல்லது. 3 நிமிடங்களுக்கு மிகாமல் போன் கால்களை பேசிமுடிப்பது இன்னும் நல்லது. ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசாமல், நடப்பதும் நல்லது. ஸ்மார்ட்போனை ஆப் செய்துவிட்டு யோகா, இசை கேட்டல், புத்தகம் படித்தல், உடற்பயிற்சி செய்தல், தோட்ட வேலைகளை பார்த்தல் என செய்து வந்தாலே இப்பிரச்னை பெருமளவு குறையும்.