ஜிம்பாப்வேயை வீழ்த்தி உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை? தொடர் தொடர்பாக முழு தகவல்

ஒரு நாள் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியுடன் தமது சொந்த மண்ணில் இதுவரை எந்தவொரு தோல்வியையும் சந்தித்திராது காணப்பட்டிருந்த இலங்கை அணியானது, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30) காலி நகரில் இடம்பெற்றிருந்த போட்டியில் அவ்வணிக்கு எதிராக பாரிய வெற்றி இலக்கு ஒன்றினை வைத்தும் மிகவும் மோசமான முறையில் தோல்வியைத் தழுவியதால், வரலாறு மாற்றப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட அத்தோல்வியினால் இலங்கை அணி மீது ரசிகர்களின் அதிருப்தியும், விமர்சனங்களும் அதிகரித்து வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (2) ஜிம்பாப்வே அணிக்கெதிராக நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலகு வெற்றியொன்றினைப் பெற்ற இலங்கை அணியானது தமது முதல் தோல்விக்கு பதிலடி தந்து, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 1-1 என சமநிலைப்படுத்தியது.

இவ்வாறாக தொடர் சமநிலை அடைந்திருக்கும் காரணத்தினால் எஞ்சியிருக்கும் தொடரின் மூன்று ஒரு நாள் போட்டிகளும் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளாக அமையவுள்ளன.

இந்த அடிப்படையில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் தொடரின் மூன்றாவது ஒரு நாள் போட்டி, எதிர்வரும் வியாழக்கிழமை (6) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணி

இலங்கை அணியைப் பொறுத்தவரையில், அவர்களது துடுப்பாட்டம் மிகவும் பலமான நிலையில் காணப்படுகின்றது. சம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் பயிற்சி ஆட்டங்கள், அதே தொடரில் இந்திய அணியுடனான போட்டி ஆகியவற்றில் 300 இற்கும் மேலான ஓட்டங்களை இலங்கை குவித்திருந்தது.

இன்னும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது மற்றும் இரண்டாவது போட்டிகளிலும் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் சிறப்பாக காணப்பட்டிருந்தது. இவையனைத்தும் இலங்கையின் துடுப்பாட்டம் மிகவும் முன்னேற்றகரமான நிலையில் காணப்படுகின்றது என்பதற்கு சான்றாக உள்ளன.

அத்தோடு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாட்டத்தில் மோசமான ஆட்டத்தை காண்பித்தாலும், அணியினை மீண்டும் தூக்கி நிறுத்தும் ஆற்றல் கொண்ட பலமான மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களை இலங்கை அணி கொண்டுள்ளது.

பந்து வீச்சினை எடுத்து நோக்குகின்ற போது, இலங்கை பற்றி எதிர்வு கூறுவது சற்றுக்கடினம், இலங்கை விளையாடும் போட்டிகளில் அடிக்கடி புதிய பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாலும், அணியின் சிரேஷ்ட பந்து வீச்சாளர்கள் அவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டாத காரணத்தினாலும் இலங்கை அணியின் பந்து வீச்சு இன்னும் உறுதியடையவில்லை என்றே கூற முடியும். எனினும், கடந்த போட்டியில் இலங்கை அணியின் அபார பந்து வீச்சே ஜிம்பாப்வே அணியை இலகுவாக வீழ்த்த துணைபுரிந்திருந்தது.

இதே வகையிலான பந்து வீச்சினை மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெளிப்படுத்தி களத்தடுப்பிலும் பிரகாசித்தால், மாத்திரமே சற்று முன்னேற்றகரமான ஆட்டத்தில் இருக்கும் ஜிம்பாப்வே அணியை தோற்கடிப்பது இலங்கை அணிக்கு இலகுவாகக் காணப்படும்.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்துவதில் முக்கிய வீரர்களாக குசல் மெண்டிஸ், உபுல் தரங்க மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.

 

இதில் உபுல் தரங்க இறுதியாக தான் விளையாடிய மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் அரைச்சதம் (57,79*,75*) கடந்திருக்கின்றார். அதே போன்று வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட குசல் மெண்டிஸ் ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஓட்டமேதுமின்றி வெளியேறியிருப்பினும், அவ்வணிக்கெதிராக 51.66 என்கிற ஓட்ட சராசரியைக் கொண்டிருக்கின்றார். அணித்தலைவர், மெதிவ்சினை எடுத்து நோக்கும் போது எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்ட வீரர்களில் ஒருவராக அவர் காணப்படுகின்றார்.

நீண்ட காலம் காயத்திலிருந்த காரணத்தினால், இலங்கை அணி விளையாடிய பல போட்டிகளில் பிரசன்னமாகாது போயிருந்த மெதிவ்ஸ் இவ்வருடம் தான் விளையாடிய நான்கு ஒரு நாள் போட்டிகளிலும் 81 என்கிற சிறப்பான ஓட்ட சராசரியைக் கொண்டிருக்கின்றார். அத்தோடு, மூன்றாவது ஒரு நாள் போட்டி நடைபெறப்போகும் ஹம்பந்தோட்டை சர்வதேச மைதானத்தில் அதிக ஓட்டங்கள் (486) குவித்த தற்போதைய அணி வீரர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று பந்து வீச்சில், இலங்கைக்கு பலமாக சைனமன் சுழல் வீரர் லக்‌ஷான் சந்தகன் காணப்படுவார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின்னர் ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் விளையாடத் தொடங்கியிருக்கும் சந்தகன், தனது மீள்வருகைப் போட்டியில் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்து ஜிம்பாப்வே அணியை வீழ்த்த உதவியிருந்தார். அத்தோடு, இவருக்குத் துணையாக தனது கன்னி ஒரு நாள் போட்டியில் ஹட்ரிக் சாதனையைப் பதிவு செய்த வெறும் 19 வயதேயான வலது கை சுழல் வீரர் வனிந்து ஹஸரங்கவும் காணப்படுவார்.

எமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின்படி, மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சகலதுறை ஆட்டக்காரர் லஹிரு மதுஷங்க மற்றும் இடதுகை சுழல் வீரர் அமில அபொன்சோ ஆகியோர் எஞ்சிய 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக சாமர கபுகெதர மற்றும் சுரங்க லக்மால் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி – நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், உபுல் தரங்க, அஞ்சலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), அசேல குணரத்ன, வனிந்து ஹஸரங்க, லசித் மாலிங்க, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, லக்‌ஷான் சந்தகன்

ஜிம்பாப்வே அணி

ஒரு நாள் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் காணப்படாத ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டம் அவர்களது அயராத உழைப்பின் காரணமாக அண்மைய காலங்களில் முன்னேற்றத்தினை அடைந்திருக்கின்றது.

முதலாவது ஒரு நாள் போட்டியை எடுத்து நோக்கும் போது, இலங்கை அணியின் சுழல் வீரர்களை தமக்கு சாதமாக மாற்றிக்கொண்ட ஜிம்பாப்வே அணியினர் ஒரு நாள் போட்டிகளில் இலங்கையில் இதுவரை காலமும் எட்டப்படாத 300 இற்கும் மேலான இலக்கினை விரட்டி சாதனை ஒன்றினை பதிவு செய்திருந்தனர். எனினும், இரண்டாம் போட்டியில் இலங்கை அணியின் சுழல் வீரர்களால் நிலை குலைந்த அவர்களுக்கு துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியவில்லை. எனினும், இதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வணியினர் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் துடுப்பாட்டத்தில் மோசமாக செயற்பட்டுவிடுவார்கள் எனக் குறிப்பிட்டுக் கூறமுடியாது.

அவ்வணியின் பந்து வீச்சினை நோக்கும் போது, அது சற்று பின்னடைவான நிலையிலையே காணப்படுகின்றது. இறுதியாக நடைபெற்ற இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இதனைத் தெளிவாக அவதானிக்க கூடியதாக காணப்படுகின்றது. எனினும், தொடர்ந்து அவ்வணியினர் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் எனில், அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணியும் இலங்கைக்கு சவால் தரமுடியும்.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

அவ்வணியின் துடுப்பாட்ட உறுதி சொலமன் மிர், மல்கம் வால்லர் மற்றும் ஹமில்டன் மசகட்சா ஆகியோரிடம் தங்கியிருக்கின்றது.

சொலமன் மிர், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஓட்டம் ஏதுமின்றி இலங்கை பந்து வீச்சாளர்களினால் வீழ்த்தப்பட்டிருப்பினும் முதல் போட்டியில் இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர்களை நிர்மூலமாக்கி சதம் பெற்றது அவர் இலங்கைக்கு எச்சரிக்கை விடுப்பார் என்பதனை உணர்த்தி நிற்கின்றது.

 

அதேபோன்று, மசகட்சா முதலாவது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக செயற்படாது போயிருப்பினும், இறுதியாக நடைபெற்ற போட்டியில் பெறுமதியான ஓட்டங்களை (41) சேர்த்திருந்தது அவர் வழமையான தனது ஆட்டத்திற்கு திரும்பியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. எனவே, ஜிம்பாப்வே அணியில் இருக்கும் மிகவும் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரரான அவரை இலங்கை பந்து வீச்சாளர்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.

அத்தோடு, மல்கம் வால்லர் கடந்த இரண்டு போட்டிகளிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான ஓட்டங்களைப் (40*,38) பெற்றிருப்பதும் அவர் ஜிம்பாப்வே அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்திற்கு உறுதுணையாக அமைவார் என்பதைக் காட்டுகின்றது.

ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சினை பலப்படுத்துவதில் தென்டாய் சட்டாரா முக்கிய பங்கு வகிக்கின்றார். இத்தொடரில் தான் விளையாடிய இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்த வலதுகை வேகப்பந்து வீச்சாளரான அவரை இலங்கை வீரர்கள் மூன்றாம் போட்டியில் கவனமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இவ்வாறாக, முக்கிய வீரர்களுடன் காணப்படும் ஜிம்பாப்வே அணியானது கடந்த போட்டி போன்று எதுவித வீரர்கள் மாற்றமின்றி மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் ஜிம்பாப்வே அணி – ஹமில்டன் மசகட்சா, சொலமன் மிர், கிரைக் எர்வின், சோன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, றயன் பேர்ல், மல்கம் வால்லர், பீட்டர் மூர், கீரீம் கிரமர் (அணித்தலைவர்), டொனால்ட் ட்ரிபானோ, தென்டாய் சட்டாரா

மூன்றாவது ஒரு நாள் போட்டி இடம்பெறும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இரண்டு வருடங்களின் பின்னர், ஒரு நாள் போட்டியொன்று நடைபெறுகின்றது. துடுப்பாட்டத்திற்கு சாதகமான இம்மைதானத்தில் இறுதியாக நடைபெற்றிருந்த ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியானது பாகிஸ்தான் அணியை 165 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி தொடர்ந்தும் இம்மைதானத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒரு நாள் தரவரிசைப்பட்டியலில் முன்னேறி, உலக கிண்ணத்திற்கு நேரடியாக தகுதிபெறும் அணிகளில் ஒன்றாகக் காணப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.