மதுசார உற்பத்திக் கம்பனிகளின் வரியை நூறு மடங்காகக் குறைப்பதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளார்.
நூறு மில்லியன் ரூபா தற்போது அறவிடப்படும் நிலையில் அதனை ஒரு மில்லியன் ரூபாவாகக் குறைக்க வேண்டுமென அவர் பரிந்துரை செய்துள்ளார்.
நிதி அமைச்சர் மதுசாரங்களுக்கான வரியைக் குறைக்க வேண்டுமெனக் கூறிய கருத்து அவருக்கு மதுசாரக் கம்பனிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதென மதுசாரத்திற்கெதிரான இளைஞரணியின் பொதுச் செயலாளர் தெய்வேந்திரம் உதயரூபன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நிதி அமைச்சர் மங்கள சமரவீர மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் பரிந்துரைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையையொட்டிச் சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஆகவே, ஊடகங்களுக்கு இதுபற்றிய சரியான தகவல்கள் மக்களைச் சென்றடைய வைப்பதற்கான தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கிருக்கிறது.
சாராயப் பாவனையால் அரசுக்குப் பெரு வரி கிடைக்கிறது, இலாபம் கிடைக்கின்றது என மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசாங்கத்திற்கு இதனால் கிடைக்கும் வருமானத்திலும் பார்க்க மூன்று மடங்கு நிதியை அரசாங்கம் செலவளிக்கிறது.
சுமார்- 15 ஆயிரம் கோடி ரூபாவை வருடாந்தம் அரசாங்கம் இழந்து கொண்டிருக்கின்றது. சமுர்த்தி உதவித் தொகையாக ஒதுக்கப்படும் நிதி ஒன்பதாயிரம் கோடி ரூபாவாகவும், கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி பத்தாயிரம் கோடி ரூபாவாகவும் காணப்படும் நிலையில் மதுசாரத்திற்காக 15 ஆயிரம் கோடி ரூபாவை அரசாங்கம் இழக்க வேண்டியுள்ளது.
பண ரீதியாக மாத்திரமல்லாமல் உற்பத்தித் திறன் குறைவடைதல், விதவைகளின் தொகை அதிகரித்தல் போன்ற பல்வேறு பாதிப்புக்களும் ஏற்படுகின்றன.
கடந்த கால அரசாங்கமும் இவ்வாறான மதுசார, சிகரெட் கம்பனிகளுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் மதுவிலிருந்து விடுதலை பெற்ற நாடு என்ற கொள்கையுடன் வந்த புதிய அரசாங்கத்தை மக்கள் ஆதரித்து ஆட்சிப் பீடமேற்றினார்கள்.
இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் மதுசாரங்களுக்கான வரியைக் குறைக்க நடவடிக்கை எடுத்தால் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நாங்கள் பின்னடைவையே எதிர்நோக்க வேண்டி வரும்.
மேலும் பியர், வைன் விலைகளைக் குறைக்க வேண்டுமெனவும் நிதியமைச்சர் பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு அவர் உத்தேசிப்பதானது கசிப்பு மற்றும் சட்டவிரோத உற்பத்திகள் அதிகரிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும்.
65 வீதமான கசிப்புப் பாவனையாளர்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டிருப்பது முற்றுமுழுதாகத் தவறானதொரு கருத்து.
உலகத்தில் அதிகமானோர் சட்ட ரீதியாக வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் மூலமாகவே இறக்கிறார்கள். சட்ட விரோதமாகவும், சட்ட ரீதியாகவும் விற்பனை செய்யப்படும் மதுசாரங்களுக்கிடையில் எந்தவொரு வித்தியாசமுமில்லை.
குறித்த இரண்டு உற்பத்திகளிலும் எத்தனோல் இராசயனமே பயன்படுத்தப்படுகிறது. செறிவு குறைந்த மதுசாரம் என்பதால் பாதிப்புக் குறைவாகவிருக்கும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருப்பது முற்றுமுழுதான பொய்.
யாழ்ப்பாணத்தவர்கள் தான் அதிகமாகச் சாராயம் குடிக்கிறார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கும் கருத்து பரபரப்பானதொரு செய்தியாக அமைந்திருந்தது. ஆனால், அது முற்றுமுழுதான பொய். அவர் இவ்வாறானதொரு கருத்தை நுவரெலியா மண்ணில் வைத்தே கூறியுள்ளார்.
இந்தக் கருத்தை யாழ்ப்பாண மண்ணில் வைத்துக் கூற வேண்டாம் என நாங்கள் கேட்டுக் கொண்டதற்கமைவாக ஜனாதிபதி யாழ்ப்பாண மண்ணில் கூறவில்லை.
புள்ளிவிபரங்களின் அடிப்படையில் சாராயம் பாவிப்பதில் யாழ். மாவட்டம் முதலிடமல்ல. யாழ்ப்பாணத்தில் ஆறு இலட்சம் மக்களுக்கு 69 சாராய விற்பனை நிலையங்களே காணப்படுகின்றன.
கொழும்பு மாவட்டத்தில் 58 இலட்சம் மக்கள்காணப்படும் நிலையில் 1600 சாராய விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.
இது சிறியதொரு ஒப்பீடு. தனிநபர் சாராயப் பாவனை அதிகரித்திருக்கிறது. போதைப்பொருள் பாவனை தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது என்று கூறுவதும் முற்றுமுழுதான பொய்.
கடந்த-2016ம் ஆண்டு புள்ளிவிபரங்களை எடுத்து நோக்கினால் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை மிக மிக அரிதாகவுள்ளது. ஆனாலும், எமது அரசியல் மேடைகளிலும், ஊடகங்களிலும் போதைப்பொருள் பாவனை எமது மக்கள் மத்தியில் அதிகம் எனக் கூறுவதிலுள்ள உள்நோக்கங்களை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் கடந்த கால யுத்தத்திற்குப் பின்னர் மதுசாரப் பாவனையில் சிறியதொரு அதிகரிப்பு யாழ். மாவட்டத்தில் காணப்பட்டது.
புதிய சந்தை மற்றும் மதுசாரக் கம்பனிகள் எங்கள் மக்களை இலக்கு வைத்துச் செயற்பட்டது அனைவரும் அறிந்த விடயம். ஆனால், தற்போது அதன் வீதம் குறைந்து ஒரே மட்டத்தில் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
ஆகவே, மாவட்ட ரீதியில் இலங்கையின் யாழ். மாவட்டத்தில் அதிக சாராயப் பாவனை காணப்படுகின்றது எனக் கூறுவதில் எந்தவித உண்மையுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மதுசாரத்திற்கெதிரான இளைஞரணியின் தலைவர் தேவராசா பிறேமராசாவும் கலந்து கொண்டு கருத்துக்கள் முன்வைத்தனர்.