புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான சாட்சிய பதிவுகள் இன்று 5வது நாளாக விசேட விசாரணை மன்று முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட பொதி விசாரணை மன்றின் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இதன்போது, அரச சட்டவைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் தடயவியல் பிரிவு அதிகாரி ஆகியோரிடம் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மன்றின் முன்னிலையில் சாட்சியமளித்த சட்ட வைத்திய அதிகாரி தனது சாட்சியத்தில்,
மாணவியின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கழுத்துப் பட்டியே அவரின் மரணத்துக்கு காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தலையின் பின்புறத்தில் தாக்கப்பட்டமை காரணமாக மாணவியின், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டமை கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் தடயவியல் பிரிவு அதிகாரி தனது சாட்சியத்தில் ,
மாணவியின் உடலிலிருந்து மீட்கப்பட்ட சிறிய முடிகள், பகுப்பாய்வுகளுக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் கையளிக்கபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சாட்சிப் பதிவுகள் தொடர்ந்தும் 9 அமர்வுகளுக்கு இடம்பெறவுள்ளன.
குறித்த சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 17ம் 18ம் மற்றும் 19ம் திகதிகளிலும், 24ம், 25ம் மற்றும் 26ம் திகதிகளிலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ம், 3ம் மற்றும் 4ம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளன.