இறுதிப் போரின்போது இலங்கை படையினரால் போர்க்குற்றங்கள் நடத்தப்பட்டது என்பது உறுதியானால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கையின் புதிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக இன்றைய தினம் இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட, இராணுவத் தளபதி மகேஸ் சேன நாயக்க, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மஹேஷ் சேனாநாயக்க,
இந்தப் புதிய பதவியை ஏற்று சில மணிநேரமே நிறைவடைந்த நிலையில் மிகப் பெரிய பணி ஒன்றை என்னிடம் எதிர்பார்க்கின்றனர். இராணுவ தளபதி என்ற வகையில் இது மிகப் பெரிய பொறுப்பு. இராணுவத்தினர் மீது போர்க் குற்றம் சுமத்தும் அணிகள், அங்கு இருந்தனவா என்பது சிக்கலுக்குரியது.
இராணுவத்தினர் நாட்டில் இரண்டு சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இதனால், குறைந்தளவான குற்றங்களே இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அத்துடன் இராணுவத்தினர் அவ்வாறு போர் குற்றங்களைப் புரிபவர்கள் அல்லர்.
ஆனாலும் போர் குற்றம் செய்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட இராணுவத்தளபதி, ஒழுக்கமும் அர்ப்பணிப்புமே இலங்கை இராணுவத்தின் பலம் எனவும், சீருடை அணிந்ததால் மாத்திரம் அந்த விடயம் நிறைவேறாது எனவும் மேலும் குறிப்பிட்டார்.