இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது சிறுமி ஒருவர் கண்களில் இருந்து ரத்தம் வழியும் அரிதான நோயால் தாக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருவது மருத்துவர்களை திணறடித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரில் வசித்துவருபவர்கள் முகமது அப்சல் மற்றும் நஜிமா பேகம் தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் அஹானா அப்சல் என்ற குழந்தை உள்ளது.
இவர்தான் தற்போது கண்களில் ரத்தம் வழியும் அரிதான நோயால் பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி அஹானாவுக்கு திடீரென்று மூக்கு வழையாக ரத்தம் கசிந்துள்ளது.
இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிகப்படியான காய்ச்சல் காரணமாக மூக்கு வழையாக ரத்தம் கசிந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சிறுமியின் கண்கள், காது, மூக்கு, வாய் என தினசரி ரத்தம் கசிந்து வருவது அவரது பெற்றோரை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது மட்டுமின்றி, மருத்துவர்களையும் திணறடித்துள்ளது.
சிறுமியின் இந்த அரிய நிலையின் காரணம் அறிய இதுவரை சில லட்சம் ரூபாய் செலவு செய்தும் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறை ரத்தக்கசிவுக்கு பின்னரும் சிறுமிக்கு போதிய ரத்தத்தை அவருக்கு செயற்கையாக செலுத்தி வருவதாக கூறும் அவரது பெற்றோர், தங்களது உலகமே தற்போது இருள் சூழ்ந்து காணப்படுவதாக வருத்தமுடன் தெரிவித்துள்ளனர்.
தற்போது சிறப்பு பரிசோதனை செய்வதற்காக ரூ.2 லட்சம் வரை தேவைப்படுவதாக கூறும் முகமது அப்சல், மருத்துவர்கள் உறுதியான ஒரு முடிவை தெரிவித்தால் மட்டுமே மேற்கொண்டு சிகிச்சைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.
மட்டுமின்றி போதிய வருவாய் இல்லாத காரணத்தால், தமது மகளின் சிகிச்சை செலவினங்களுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி உதவி கோரி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நிலை உலகில் எந்த மூலையில் வசிக்கும் குழந்தைக்கு நேர்ந்திருந்தாலும், அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவரை தாங்களும் தொடர்பு கொள்ள வேண்டும், அதற்கு பொதுமக்கள் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.