வடகொரியாவுக்கு எதிரான புதிய தடை, ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி ஏவுகணைகளை சோதனை செய்து வரும் வடகொரியா, சமீபத்தில் நேற்று முன்தினம் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை ஒன்றை பரிசோதித்து. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் தொடர் சோதனைகள் அமெரிக்காவை கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, ஐ.நா. அவசர கூட்டத்தை கூட்டி உடனே விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள் பங்கேற்றன.

இதில், வடகொரியாவுக்கு மேலும் பொருளாதார தடையை விதிக்க வேண்டும் மற்றும் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் கோரிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் துணை தூதர் விளாடிமிர் சாஃப்ரான்கோவ் கூறுகையில், வடகொரியா மீதான புதிய பொருளாதார தடையை எதிர்ப்பதாக கூறினார். மேலும், வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

நாம் வெறுமனே ஒரு முட்டுக்கட்டையை நோக்கி விரைகிறோம். வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ராணுவ நடவடிக்கைகளும் தீர்வாக அமையாது. எனவே ரஷ்யா அதனை ஏற்காது என்று கூறினார்.