வடகொரியா உடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும்: சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை குறிவைத்து அழிக்கும் ஏவுகணை மற்றும் ராக்கெட் எஞ்சின்களை சோதனை செய்யும் வடகொரியா, சமீபத்தில் புதிய ஏவுகணை
ஒன்றை சோதனை செய்தது.

வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா பரிசோதித்தது. இந்த சோதனையை அந்நாட்டு அதிபர் கிம் ஜான்
உன் நேரில் பார்வையிட்டதோடு, அமெரிக்கர்களுக்கு சுதந்திர தின பரிசு என தெரிவித்திருந்தார்.

வடகொரிய அதிபரின் இந்த பேச்சு வெள்ளை மாளிகையை கொதிப்படைய வைத்துள்ளது. இதனையடுத்து, மேற்கொண்டு என்ன செய்வது? என்ன அதிபர் டிரம்ப் ஆலோசணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வட கொரியாவின் ஏவுகனைச் சோதனையானது ராணுவ விரிவாக்கத்துக்கான செயல் என விமர்சித்துள்ள ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்த திட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ”வடகொரியாவுடன் வர்த்தகம் செய்வதை ஊக்குவிப்பது ஐ.நா.வின் பாதுகாப்பு தீர்மானத்தை மீறுவதாகும். அதில் சில நாடுகள் அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்வதற்கு விரும்புகின்றன. ஆனால், அது நடக்காது. வட கொரியா
தனக்கான 90 சதவீத வணிகத்தை சீனாவுடன் மேற்கொள்கிறது. சீனா அதனை நிறுத்தவேண்டும்” என்று நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைக்கு சீனா இன்னும் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.