நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். எந்த விஷயத்திலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத அரசாக இந்த அரசு உள்ளது. அதேபோல எதிர்க்கட்சியும் வலுவாக செயல்படவில்லை.
ஓ.பி.எஸ். அணியுடன் எங்கள் கட்சிக்கு சுமூகமான சூழல் உள்ளது. தேர்தல் வரும் போது கூட்டணி பற்றி தெரிவிக்கப்படும்.
ரஜினிகாந்த் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் நண்பர். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அதற்காக வீண் சர்ச்சைகளை கிளப்ப கூடாது.
கொடநாடு எஸ்டேட்டில் நடக்கும் கொள்ளை, கொலை, தற்கொலை சம்பவங்கள் மர்மமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
நீலகிரி, கோவை, வால்பாறையில் மனித -விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கவும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.