கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் மகேந்திரசிங் டோனி.
2004-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான அவர் இரண்டு உலககோப்பையை பெற்றுக்கொடுத்தார். 2007-ம் ஆண்டு அறிமுக 20 ஓவர் உலககோப்பையை வென்றார். 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி கோப்பையை வென்றார்.
இந்திய கிரிக்கெட்டின் மைல்கல்லில் ஒருவரான அவர் ஏற்கனவே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து திடீரென விலகிய அவர் அந்தப்போட்டிகளில் மட்டும் தற்போது ஆடி வருகிறார்.
ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் தான் டோனியிடம் இருக்கும் தனிபாணி. அதற்கு 2011 உலககோப்பை இறுதிப்போட்டி உள்பட பல்வேறு ஆட்டங்களை சொல்லலாம். ஆனால் சமீபகாலமாக ஆட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் அவர் திணறி வருகிறார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது போட்டியில் டோனி ஆட்டம் மிகவும் சறுக்கலாக இருந்தது. இப்படி ஒரு மந்தமான ஆட்டத்தை அவர் இதற்கு முன்பு வெளிப்படுத்தியது கிடையாது. 114 பந்துகளில் 54 ரன் எடுத்தது அவரது மிக மோசமான ஆட்டமாக அமைந்தது. கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஒன்று.
முன்புபோல் டோனியால் வெற்றிகரமாக ஆட்டத்தை நிறைவு செய்ய முடியவில்லை என்ற விமர்சனம் தற்போது அதிகமாகி வருகிறது. அதேநேரத்தில் அவர் இன்னும் திறமையுடன் தான் இருக்கிறார் என்று அவரை ஆதரிப்பவர்களும் உண்டு.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி முடிந்த பிறகு தனது எதிர்காலம் குறித்த இறுதி முடிவை எடுக்கப்போவதாக டோனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். ஆனால் அவர் தனது முடிவு பற்றி தெரிவிக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி போட்டி முடிந்த பிறகு வெஸ்ட்இண்டீஸ் பயணத்திலும் ஆடி வருகிறார்.
3-வது ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 4-வது போட்டியில் அரை சதம் எடுத்து இருந்தாலும் அணி வெற்றி பெறவில்லை.
வருகிற 7-ந்தேதி 36-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் டோனி ஓய்வு முடிவை அறிவிக்கும் நேரம் நெருங்கி விட்டதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
2019 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர் விரைவில் ஓய்வு முடிவை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது. டோனியின் ஆட்டத்தில் சற்று தேய்மான காணப்பட்டாலும் 15 விளம்பரங்களில் அவரது ஒப்பந்தம் இன்னும் இருந்து வருகிறது.
டெஸ்ட் போட்டியில் அவர் எப்படி ஓய்வு முடிவை எடுத்தாரோ? அதேபோல தற்போதும் எடுக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளரும், தேர்வாளருமான கெய்க்வாட் கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, டோனி தற்போது நல்ல நிலையில் இல்லை. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது இடத்தை நிரப்புவது கடினம். ரிஷப்பாண்டை கொண்டு வரலாம் என்றார்.
டோனியும் ஓய்வு பெறும் மனநிலையில் தான் உள்ளார். ஆனால் எப்போது ஓய்வு அறிவிப்பது என்பதில் தான் முடிவு எடுக்க முடியாமல் உள்ளார்.
இலங்கை தொடருக்கு முன்பு டோனி ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.