அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த முன்னணி கால்பந்தாட்ட வீரரான லியொனல் மெஸ்சி தனது 13வது வயதில் இருந்து ஸ்பெனின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். அவருடன் ஏற்கனவே போடப்பட்டிருந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் அவர் பார்சிலோனா அணியை விட்டு விலக முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இது பார்சிலோனா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் உண்டாக்கியது.
ஆனால் அவருடன் 2021-ம் ஆண்டு வரை விளையாடுவதற்கான புது ஒப்பந்தத்தை பார்சிலோனா அணி நிர்வாகம் கையெழுத்திட வாய்ப்புகள் உள்ளதாகவும் அதற்காக சுமார் 300 மில்லியன் யூரோ வரை வழங்கப்படலாம் எனவும் சில தகவல்கள் வந்திருந்தன.
இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று மெஸ்சி, பார்சிலோனா அணியில் தொடர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சம்மதித்து விட்டதாக ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதை பார்சிலோனா அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. சமீபத்தில் திருமணமான மெஸ்சி அடுத்த வாரம் பயிற்சிக்கு திரும்ப உள்ளதாகவும் அப்பொழுது சம்பளம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனவும் தெரிகிறது. இந்த புது ஒப்பந்தத்தின்படி அவருக்கு ஒரு சீசனில் விளையாட 26.4 மில்லியன் யூரோ வழங்கப்பட உள்ளது.
இதன்மூலம் ஒரு வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து லட்சம் யூரோக்களிக்கும் அதிமாக சம்பாதிக்க உள்ளார் மெஸ்சி. அவருக்கு விருப்பம் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை இன்னும் ஒரு வருடம் நீட்டித்து கொள்ளலாம் எனவும், பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றால் அவரது ஊதியம் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பார்சிலோனா அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அவருக்கு 23.2 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை வழங்கபட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கருத்து பார்சிலோனா அணி நிர்வாகம் ”மெஸ்சி பார்சிலோனா அணியில் தொடர சம்மதித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சை அளித்துள்ளது. அவர் சிறு வயது தொடங்கி தனது வாழ்நாள் முழுவதும் பார்சிலோனா அணிக்காகவே விளையாடி வருகிறார், அதன்மூலம் உலக கால்பந்து வரலாற்றில் கூட இதுவரை செய்யப்படாத பல சாதனைகளை பார்சிலோனா அணிக்காக செய்து உள்ளார்” என்று கூறியுள்ளது.