இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் கைலாயம் மற்றும் மன்சரோவர் இமயமலையில் உள்ளது. இது, சீன பகுதியான திபெத்தில் இருக்கிறது. அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நாதுலா கணவாய் வழியாக சென்று வருவது வழக்கம். இங்கு ஆண்டு தோறும் இந்தியாவில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம்.
அதன்படி இந்தியாவைச் சேர்ந்த இரு யாத்ரீகர்கள் குழு புறப்பட்டுச் சென்றது. கடந்த ஜூன் 20ம் தேதி துவங்கிய இந்த யாத்திரை வருகிற ஜூலை 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதில் சிக்கிம் – திபெத் எல்லையில் உள்ள நாதுலா கனவாய் வழியாக செல்ல சீனா அனுமதி மறுத்துள்ளது. நாதுலா கனவாயின் ஒரு பகுதி சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆனால், இந்த பகுதி தங்களுக்குத் தான் சொந்தம் என கூறி சீனா சாலைகளை அமைத்து வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கைலாயம் செல்லும் பாதையில் உள்ள நாதுலா கனவாய் சீனாவுக்கு சொந்தமானது. அது இந்தியாவின் பகுதி என்று இந்தியா கருதினால் அந்த தவறை திருத்தம் செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் இந்திய பக்தர்களை கைலாயத்துக்கு அனுமதிப்பதை தொடர முடியும் என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூ காங் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
தற்போது, இந்தியா, சீனா இடையே எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாதுலா கணவாய் பாதைக்கு சீன அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில் நாதுலா கணவாய் பகுதியை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும் பக்தர்கள் தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தில் லிபுலேகு பாதை வழியாக செல்லவும் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், நாதுலா கணவாய் மூடப்பட்டதாகக் கூறி, இந்தியர்களின் வசதிக்காக மாற்று வழிக்கு ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்க சீனா தயாராக இருப்பதாக இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தில், சீன தூதர் ஸி லியான் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அதிகாரப்பூர்வ யாத்திரை லிபுலேகு பாதை வழியாகவும், அதிகாரப்பூர்வமற்ற யாத்திரை லாசா மற்றும் புராங் வழியாகவும் அனுமதிக்கப்படுவதாக கூறினார்.
நாதுலா கணவாய் வழியாக பயணம் செய்ய 7 குழுக்களை சேர்ந்த 350 யாத்ரீகர்களுக்கு சீனா அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.