கொழும்பு துறைமுக நகரத் திட்டப்பணிகளை 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த திட்டத்திற்காக கடலில் இருந்து நிலத்தை மீட்கும் நடவடிக்கைகள் 45 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி லியாங் தோ மிங் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “மூன்று தூர் வாரும் கப்பல்களைக் கொண்டு, நிலப்பரப்பை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி நிலத்தை மீட்கும் நடவடிக்கைகள் அனைத்தும் 2019ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும். இதனையடுத்து உட்கட்டமைப்பு மற்றும் பாதைகளை அமைக்கும் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும்.
அத்துடன், கடற்கரை, மரினா மற்றும் மத்திய பூங்கா என்பன தொடர்பான பணிகள் 2021ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படும். இதில் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இதேவேளை, துறைமுக நகரத்திலிருந்து பிரதான நெடுஞ்சாலைக்கு சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்கள் ஊடாக இணைப்புகள் ஏற்படுத்தப்படும்.
அத்துடன், 30 நிமிடங்களில் விமான நிலையத்தை அடைவதற்கான போக்குவரத்து அமைப்புகள் ஏற்படுத்தப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.