எதிர்ப்பு வலுத்ததால் பின்வாங்கியது அரசு! – காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து ஆட்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் தாமதித்தே வரும்

பலவந்தமாக காணாமல்போகச்செய்வதிலிருந்து ஆட்களைப் பாதுகாக்கும் சர்வதேச சமவாய சட்டமூலத்தை தாமதப்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அது நாடாளுமன்றத்தில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
குறித்த சட்டமூலம் மீது பிறிதொரு நாளில் விவாதம் நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
தினப்பணிகள் முடிவடைந்த பின்னர், வலுக்கட்டாயமாகக் காணாமல்போக்கப்படுவதிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்திலும் குறித்த விடயம் இடம்பெற்றிருந்தது.
எனினும், குறித்த சட்டமூலத்தைத் தாமதப்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன், குறித்த சட்டமூலத்திலுள்ள சில பிரிவுகளுக்கு சில தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். மஹிந்த அணி முழுமையாகவே எதிர்த்திருந்தது. இவ்வாறானதொரு  பின்புலத்திலேயே சட்டமூலத்தை நிறைவேற்றுவதை அரசு தாமதப்படுத்தியுள்ளது.
பலவந்தமாக ஆட்களைக் காணாமல்போகச் செய்வதிலிருந்து பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தில் இலங்கை 2015ஆம் ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி கையெழுத்திட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.