புதிய அரசியல் யாப்பொன்று கொண்டுவரப்படவேண்டும் என்பதை இந்த நாட்டின் 64 சதவீத மக்கள் அங்கீகரித்துள்ளனர்.

புதிய அரசமைப்பு  அவசியமில்லை என்று ஒட்டுமொத்த பௌத்த பீடங்களும் வலியுறுத்தியுள்ள நிலையில், 64 சதவீதமான மக்கள் புதிய அரசமைப்புக்கு ஆணை வழங்கியுள்ளனர் எனவும், எனவே, அதன் பிரகாரமே அரசு செயற்படும் எனவும் அமைச்சரவை இணைப்பேச்சாளர்கள் தெரிவித்தனர்.
“புதிய அரசியல் யாப்பொன்று கொண்டுவரப்படவேண்டும் என்பதை இந்த நாட்டின் 64 சதவீத மக்கள் அங்கீகரித்துள்ளனர். இந்த மக்களின் ஆணையை நிறைவேற்றுவதில் அரசு  முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டுவருகின்றது. இதனை வேண்டாம் என்று கூறுபவர்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்தவில்லை. மக்களின் ஆணையை நிறைவேற்றுவதிலேயே அரசு தீவிரம் காட்டிவருகின்றது” என்று அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர்  மாநாட்டில் இணைப்பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர ஆகியோர் கூறினர்.
புதிய அரசியல் யாப்பு தேவையற்றது என  மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளமை குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர்கள் இந்த விடயத்தைக்  குறிப்பிட்டனர்.
செய்தியாளர்:  புதிய அரசியல் யாப்பொன்று வரப்போகின்றது எனவும், அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும்  மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ளனரே?
அமைச்சர் ராஜித: இந்த அரசியல் யாப்பு 64 இலட்சம் மக்கள் எமக்களித்த மக்கள் ஆணைக்கமைவாகவே முன்னெடுக்கப்படுகின்றது. இந்த மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே நாம் செயற்படுகின்றோம்.
செய்தியாளர்:  பொது எதிரணி இதற்கு உடன்படுவதில்லை என்று தெரிவித்துள்ளனரே?
அமைச்சர் தயாசிறி: இவ்வாறான கோஷங்களால்தான் நாட்டுக்கு இந்த நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளுடன் இது குறித்து நாம் பேச்சு நடத்துகின்றோம். பொது உடன்பாடு காணவேண்டும் என்பதே நோக்கமாகும்.
யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கு தமது பிரச்சினை தொடர்பில் பாரிய மனஅழுத்தம் உண்டு. தமது பிரச்சினைக்குரிய தீர்வு காணப்படவேண்டும் என்பதே அவர்களது உள்ளக்கிடக்காகும். இதேபோன்று முஸ்லிம் மக்களுக்கும் இதே மனவேதனை உண்டு. வடக்கு, கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் மத்தியிலும் இவ்வாறான நிலைமை உண்டு.
இறைமை, மதங்களுக்கான உரிமை உள்ளிட்ட விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டை சுபீட்சம் மிக்கதாக முன்னெடுப்பதற்காகவே புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தியுள்ளனர். நாடு முன்னோக்கிப் பயணிக்கவேண்டும். மீண்டும் 2500 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தக்கூடாது. அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் நாம் பேச்சு நடத்தினோம். மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் விரிவான கருத்துப் பரிமாறல்களுடன் பொருத்தமான அரசியல் யாப்பொன்றைக்  கொண்டுவருவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இந்த விடயங்கள் குறித்து பேசும் இடம்தான் அரசியல் பேரவையாகும். இங்குதான் இவற்றைப் பேசவேண்டும். இங்கு பேசுவதற்கு உடன்படுகின்றனர். இங்கு பேசுபவற்றை வெளியில் வந்து திரிபுபடுத்துவது அநாகரிகமாகும். இந்தச் சபையில் பல்வேறுபட்ட கருத்துகள் உள்ளன. இது இறுதி முடிவல்ல. அரசியல் யாப்பு விடயத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. பேச்சு மட்டத்திலேயே உண்டு. கட்சிகளின் மத்தியில் பல்வேறு கருத்துகள் உள்ளன. இந்தக் கருத்துகளை விகாரைகளிலும் வேறு இடங்களிலும் விமர்சிப்பது பொருத்தமானதல்ல.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தன. 2000ஆம் ஆண்டிலும் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டது. அது தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. மக்களின் கருத்தை ஒன்றிணைப்பது அரசியல் பேரவையில் மேற்கொள்ளப்படும் பேச்சின் மூலமேயாகும். இதனைச் சீரழிக்கவேண்டாம். அரசியல் யாப்பொன்றை அமைப்பது தனிப்பட்ட கட்சிக்கு உட்பட்ட விடயமல்ல.
அமைச்சர் ராஜித: மக்கள் விரும்பும் அரசியல் யாப்பொன்றை இப்பொழுது வேண்டாம் என்று சிலர் கூறுகின்றனர். இவர்களின் கருத்து என்னவென்று நமக்குப் புரியவில்லை. அதிகாரம் பகிரப்பட்டபோது அனைவரும் கூக்குரல் எழுப்பினர்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் கருத்தையும் அறிந்து பொதுமக்களின் கருத்தையும் அறிந்து இதனை முன்னெடுக்கவுள்ளார். புதிய அரசியல் யாப்பின் அவசியத்தை கடந்த பொதுத் தேர்தலிலும், ஜனாதிபதித்  தேர்தலிலும் வாக்களித்த பெரும்பான்மை மக்கள், பௌத்த மத பிக்குகள், மதகுருமார்கள் ஆகியோர் உணர்த்தியுள்ளனர்.
புதிய அரசமைப்பு விடயத்தில் பொதுமக்களின் கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பு சிறப்பானதாகும். இது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசமைப்பில் இருந்த விசேட அம்சமாகும். இதன்மூலம் மக்களின் கருத்தை அறியவுள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்த விடயத்தில் பெருந்தன்மையுடனேயே நடக்கின்றார். பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வை அவர் விரும்பவில்லை.
பெரும்பான்மை  சிங்கள மக்களின் விரும்பத்துடனான அரசியல் தீர்வையே அவர் விரும்புகின்றார். அவரது ஜனநாயக சிறப்பம்சத்தை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.