பல ஏக்கர் நிலப்பரப்பில் வாழை மற்றும் தென்னந்தோப்புகள். சாலையில் உள்ள முகப்பைத் தாண்டியதும் தென்றல் தவழும் குளிர்காற்று நம்மை தாலாட்டு பாடி வரவேற்கும். இந்த தோப்பின் நடுவே உள்ளது அன்ன காமாட்சி ஆலயம்.
ஆலய அமைப்பு :
அழகான முன் முகப்பு. உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம். அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலின் வலதுபுறம் சித்தி விநாயகரும், இடதுபுறம் முருகன், வள்ளி- தெய்வானையும் அருள்பாலிக்கின்றனர்.
உள்ளே கருவறையில் அன்னை அன்ன காமாட்சி நின்ற கோலத்தில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னை தாமரை பீடத்தில் நிற்க அதன் அடியில் அன்ன பீடம் உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பாசம் மற்றும் அங்குசத்தை சுமந்தும் கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை அருள்பாலிக்கும் அழகே அழகு.
அன்னையின் தேவக் கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மகாலட்சுமியும், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலையும், மஞ்சள் நிற வஸ்திரமும் சாத்தி வேண்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் ஆராதனைகள் செய்தால் தடைப்பட்ட திருமணம் உடன் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள். மகாலட்சுமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதால் செல்வ வளம் பெருகும்.
திருச்சுற்றில் தென்புறம் காசி விசுவநாதர் – விசாலாட்சி தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் விசுவநாதருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். மாதப் பிரதோஷங்கள் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
சிவராத்திரியின் போது 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆலயம் தோப்பின் உள்ளே தனிமையில் இருப்பதால் 5-வது கால பூஜை நடைபெறுவதில்லை.
இந்த ஆலயத்திற்கு நான்கு தல விருட்சங்கள். இறைவன் விசுவநாதர் சன்னிதிக்கு எதிரே முதல் தல விருட்சமான நாகலிங்க மரம் உள்ளது.
மேற்கு பிரகாரத்தில் கன்னிமூலை கணபதி அருள்பாலிக் கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இரண்டாவது மற்றும் மூன்றாவது தல விருட்சங்களான அரசும் வேம்பும் வடமேற்கு திசையில் தழைத்தோங்கி வளர்ந்திருக்கின்றன. தல விருட்சத்தின் அடியில் நாகர்சிலை உள்ளது. நாகபஞ்சமி அன்று நாகருக்கு அரைத்த மஞ்சளில் அபிஷேகம் செய்கின்றனர் பக்தர்கள். இதனால் அவர்களைப் பற்றியிருக்கும் நாகதோஷத்தின் வீரியம் குறைகிறது என்பது நம்பிக்கை.
வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கிரகப் பெயர்ச்சி நாட்களில் நாயகர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சன்னிதியின் அருகிலேயே நான்காவது தலவிருட்சமான வில்வமரம் உள்ளது.
ஆராதனைகள் :
இங்கு அன்னை அன்னகாமாட்சியின் முன் ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அபிராமி அந்தாதி பாராயணம் நடைபெறுகிறது. சுமார் 200 பேர் இந்த பாராயணத்தில் பங்கு பெறுகின்றனர். 100 பாடல்கள் பாடும் போது ஒவ்வொரு பாடல் பாடி முடிந்ததும் அன்னைக்கு தீபாராதனை நடைபெறும். இப்படி 100 முறை தீபாராதனை நடைபெறுவது இங்கு சிறப்பு அம்சமாகும்.
நவராத்திரியின் போது அன்னையை 9 நாட்களும் விதவிதமாக அலங்காரம் செய்வார்கள். மறுநாள் 10-ம் நாள் விஜயதசமி அன்று விசேஷ அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் 4 வெள்ளிக்கிழமைகளில் தாழம்பு, மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, ரோஜாப்பூவால் அன்னைக்கு அலங்காரம் நடைபெறுகிறது.
தினசரி 2 கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில், கற்பூரம் தவிர்க்கப்பட்டு நெய் தீபமே பயன்படுத்தப்படுகிறது. அர்த்த மண்டப நுழைவுவாசலில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு சஷ்டியின் போதும், கார்த்திகை நாட்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும்.
இங்கு நிலவும் ஏகாந்த சூழலில் அன்னை அன்ன காமாட்சியை வழிபடுவதால் பாசமிக்க தாயை சந்தித்த உணர்வும், மன மகிழ்ச்சியும், மன நெகிழ்வும், மன அமைதியும் ஏற்படும். மன பாரம் குறையும். மனக்குறை நீங்கும் என பக்தர்கள் நம்புவது நிஜமே. சைவ வைஷ்ணவர் என்ற வேறுபாடின்றி அனைவரும் தரிசிக்கும் அன்னை அன்ன காமாட்சியை நாமும் ஒரு முறை தரிசிக்கலாமே.
ஸ்ரீரங்கம் மேம்பாலத்தின் தென் திசையில் வெள்ளி திருமுத்தம் பகுதியில் நேரு வீதியில் உள்ளது இந்த ஆலயம். நகரப் பேருந்து வசதி நிறைய உண்டு.