தமிழக அரசு சினிமா மீது விதித்துள்ள 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 3-ந்தேதி முதல் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஓரிரு நாளில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு தோல்வியிலேயே முடிந்தன.
நேற்று(புதன்கிழமை) 3-வது நாளாக தமிழகம் முழுவதும் உள்ள 1000 தியேட்டர்கள் மூடிக்கிடந்தன. நகர பகுதிகளில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் இயங்கவில்லை. இதனால் ரசிகர்கள் படம் பார்க்க முடியாமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் இத்தனை நாட்கள் தியேட்டர்களை தொடர்ந்து மூடியது இல்லை என்று தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறினார்.
தியேட்டர்களை மூடியதால் ஏற்கனவே திரைக்கு வந்து ஓடிக் கொண்டு இருந்த 10 படங்கள் நிறுத்தப்பட்டு அந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
நாளை(வெள்ளிக்கிழமை) திரி, நிரஞ்சனா, கில்லாடிதாஸ் ஆகிய படங்கள் திரைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டு விளம்பரப்படுத்தி இருந்தனர். டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண், சிவாஜி கணேசன் நடித்த எங்க மாமா ஆகிய படங்களும் நாளை திரைக்கு வருவதாக இருந்தது.
தியேட்டர்கள் ஸ்டிரைக் நீடித்தால் இந்த படங்களின் வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், திரையங்கு உரிமையாளர்கள் சங்கம், பெப்சி, தமிழ் திரைப்பட வர்த்தகசபை ஆகிய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் அமைச்சர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
அப்போது திரையுலகினர் சார்பில் கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் 15 வருடங்களாக உயர்த்தப்படாமல் இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.