தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. இவர் கடந்த பிப்ரவரி 17-ந்தேதி இரவு படப்பிடிப்பு ஒன்றை முடித்து விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளானார். அதை அவர்கள் தங்கள் செல்போன்களிலும் பதிவு செய்து கொண்டனர்.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனி என்ற சுனில்குமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கடத்தல் விவகாரத்தில் திடீர் திருப்பமாக, கைது செய்யப்பட்ட பலசர் சுனியின் கூட்டாளி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் திலீப் போலீஸ் டி.ஜி.பி.யிடம் சமீபத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக திலீப், அவரது மேலாளர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மேலும் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட போது எடுத்த வீடியோ பதிவை திலீப்பின் 2-வது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனின் கடையில் பணியாற்றும் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனி, கடிதம் ஒன்றில் கூறியிருந்தான். அதன்பேரில் போலீசார் காவ்யா மாதவனின் கடையில் அதிரடி சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர்.
இதைப்போல திலீப்புக்கு பல்சர் சுனியுடன் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. அவரது படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனி நிற்பது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சி சேனல்களில் வெளியாகின. இந்த புகைப்படங்களை கைப்பற்றிய போலீசார், அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவங்களால் போலீசாரின் பார்வை தற்போது நடிகர் திலீப் மற்றும் காவ்யா மாதவன் மீது திரும்பி உள்ள நிலையில், பாவனா கடத்தல் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த நடிகை பாவனாவுக்கும், கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீனுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாவனாவின் திருமணத்தை தடுக்கவே இந்த கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பல்சர் சுனியை இந்த கடத்தலுக்கு தூண்டியவர்கள், பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் போது அவரது அலங்கோலமான நிலையை வீடியோவில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாவனாவின் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளதாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.
எனவே இந்த கடத்தலின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? பாவனாவின் திருமணத்தை தடுப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்? என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இந்த கேள்விகளுக்கான விடைகள் விரைவில் கண்டறியப்படும் என கூறிய போலீசார், அதைத்தொடர்ந்து பாவனா கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர்.
மேலும் இந்த வீடியோ பதிவுகளை வைத்து பாவனாவிடம் பணம் கேட்டு மிரட்ட பல்சர் சுனியும் திட்டமிட்டுள்ளான். அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே சிறையில் இருந்தபடியே தொலைபேசி மூலம் திரைப்படத்துறையினரை மிரட்டியதாக பல்சர் சுனியை போலீசார் மீண்டும் கைது செய்தனர். இது தொடர்பாக காக்கநாடு சிறையில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், பல்சர் சுனி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பல்சர் சுனிக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய பல்சர் சுனி, பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் பெரும்புள்ளிகள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடப்போவதாக கூறினார்.