சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரியுடன், தமிழக அரசின் கேளிக்கை வரியையும் விதிக்க சட்டம் இயற்றப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி ரூ.100-க்கு உட்பட்ட டிக்கெட்டுக்கு 18 சதவீதம், ரூ.100க்கு அதிகமான டிக்கெட்டுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் 30 சதவீத கேளிக்கை வரியையும் சேர்த்தால் 58 சதவீத வரி செலுத்த வேண்டியது இருக்கும். இதனால் டிக்கெட் விலை உயரும், தியேட்டர்களில் கூட்டம் குறையும்.
அதிக வரி செலுத்த வேண்டியது இருப்பதால் தியேட்டர் வருமானம் குறையும். பட வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் பங்குத் தொகை சிறிய அளவிலேயே கிடைக்கும்.
இதனால் சினிமா தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். கடந்த 3-ந்தேதி தொடங்கிய தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக தொடர்கிறது.
தமிழ்நாட்டில் 1000 தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்கள் மூலம் தினமும் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை வசூல் கிடைக்கும். இன்று 4-வது நாளாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ரூ.80 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர தியேட்டர்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். தியேட்டர்களில் ஐஸ்கிரீம், பாப்கான், டீ ஸ்டால்களும் மூடப்பட்டு இருப்பதால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மால்களில் சினிமா நிறுத்தப்பட்டு விட்டதால் அங்கும் மக்கள் கூட்டம் குறைந்து விட்டது.
புதிய படங்கள் தற்போது அதிகபட்சமாக 3 வாரங்கள் ஓடுகின்றன. பல படங்கள் ஒரு வாரத்துக்குள் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டு விடுகின்றன.
அதற்குள் கிடைக்கும் வருமானம் தான் அந்த தயாரிப்பாளரை காப்பாற்ற வேண்டும். சிறிய பட்ஜெட் படங்கள், அது ரிலீஸ் ஆன ஒரு வாரத்துக்குள் அதுவும் விடுமுறை நாட்களில்தான் படத்துக்கு போட்ட பணத்தை எடுக்க முடியும்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை 10 புதிய படங்கள் ரிலீஸ் ஆகின. அதற்கு முன்பு வந்த 10 படங்கள் குறைந்த தியேட்டர்களில் ஓடிக் கொண்டு இருந்தன. 3-ந்தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படங்களின் வருமானம் அடியோடு நின்று விட்டன.
புதிய படங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள்தான் ஓடின. இதில் ஓரளவு வருமானம் வந்தது. தொடர்ந்து ஓடினால் போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று நினைத்த போது தியேட்டர் ஸ்டிரைக் தொடங்கி விட்டது.
இதுபற்றி கூறிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், புதிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே பெரிய விஷயம். கஷ்டப்பட்டு தியேட்டரில் இடம் பிடித்தோம். இப்போது அதையும் மூடி விட்டார்கள்.
இதற்கு முன்பு ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்கு லாபம் வரும் என்று எதிர் பார்த்த நேரத்தில் தியேட்டர்களை மூடி விட்டார்கள். படம் தயாரிப்பதற்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது? என்று தெரியவில்லை.
58 சதவீத வரி விதிப்பால் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் விகிதாசார பங்கு தொகை பெருமளவு குறைந்து விடும். எனவே, கேளிக்கை வரியை நீக்கா விட்டால் சினிமா துறை அழிந்து விடும். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை என்று பட தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். சினிமா உலகமே தவிப்பதாக கூறினார்கள்.
சினிமா துறையை நம்பி 1 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. இப்போது அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. படங்கள் லாபகரமாக அமையாவிட்டால் தயாரிப்பாளர்கள் படம் எடுப்பதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விடுவார்கள்.
எங்களுக்கு சினிமா மட்டும்தான் தெரியும். இனி நாங்கள் என்ன செய்வது என புரியவில்லை என்று சினிமா தொழிலாளர்கள் வேதனையுடன் கூறினார்கள். சினிமாவில் பெரிய இடம் பிடிக்கலாம் என்று நம்பி இயக்கம், ஒளிப்பதிவு, நடனம், கலை உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளில் புதிதாக சேர்ந்து இருப்பவர்களும் எதிர்காலம் என்ன ஆகுமோ? என்ற கவலையில் மூழ்கி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு திரை அரங்குகள் மூலம் கிடைக்கும் கேளிக்கை வரிதான் முக்கிய வருமானமாக இருந்தது. இப்போது நாடு முழுவதும் ஒரே வரி என்று ஜி.எஸ்.டி. முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே ‘கேளிக்கை வரியை நீக்க வேண்டும். இல்லையென்றால் தியேட்டர்களை திறக்க மாட்டோம்’ என்பதில் தியேட்டர் உரிமையாளர்கள் உறுதியாக உள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது. கேளிக்கை வரியை ரத்து செய்து விட்டனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பதால் பிராந்திய மொழி படங்களுக்கு கிடைத்த சலுகைகள் பாதிக்கப்பட்டு விட்டன.
எனவே தியேட்டர்கள் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக தொடர்கிறது. இதனால் சினிமா தியேட்டர்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி. மற்றும் கேளிக்கை வரி வருமானம் அடியோடு நின்று விட்டது. இதனால் தமிழக அரசுக்கும் பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை திரை உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர்கள் தவிப்புடன் காத்து இருக்கிறார்கள்.
கடந்த 3 நாட்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் கோவை மண்டலத்தில் ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வரிகள் மூலம் சுமார் ரூ.2 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மண்டலத்தில் மட்டும் 3 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை மண்டலத்தில் 150 திரைப்பட வினியோகஸ்தர்களும் பாதிப்படைந்துள்ளனர்.