நாட்டை முழுமையாகக் கொள்ளையடித்து தமது பொக்கற்றுக்களை நிரப்பிக் கொண்ட கூட்டம் மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக சதிமுயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.
2015 ஜனவரி 8 க்கு முன்னைய காலகட்டத்தை நாம் மீண்டுமொரு தடவை நினைத்துப் பார்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. அந்த யுகத்தை மக்கள் மறந்து விட்டார்கள் என்ற மனப்போக்கில் அந்தக் கும்பல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தேசத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றவர்களை அவ்வளவு இலகுவாக மக்கள் மறந்து விடப் போவதில்லை.அவர்கள் நேரத்துக்கு நேரம் நிறம் மாறும் பச்சோந்தியைப் போன்று தம்மை மாற்றிக் கொள்ள முனைகின்றனர்.
காலையில் பெரும்பான்மைச் சமூகங்களிடம் போய் ஒரு கதை சொல்கின்றனர். மாலையில் சிறுபான்மைச் சமூகங்களைச் சந்தித்து அவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இத்தகைய அரசியலை தமது கைவந்த கலையாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
நாட்டில் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்பி தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தக் கும்பல் தமது சந்தர்ப்பவாத அரசியல் மூலமாக மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது.
அரசு மீதான வெறுப்பைத் தூண்டும் வகையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். இனங்களுக்கிடையே முன்னுக்குப் பின் முரணாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் இனங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சதி முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். மக்கள் தவறான பாதைக்குள் நுழையாத விதத்தில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும். இந்த அநீதிச் சக்திகள் மீண்டெழ இடமளிக்கப்படக் கூடாது. இச்சக்திகள் 2015 க்கு முன்னர் ஆடிய ஆட்டத்தை முழு உலகுமே அறியும்.
அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பகற் கொள்ளை எண்ணிலடங்காதனவாகும். நேர்மை என்பது அன்றைய ஆட்சியில் துளியளவும் காணப்படவில்லை. அந்தப் பேராபத்திலிருந்து தேசத்தைப் பாதுகாப்பதற்காக நாட்டு மக்கள் பெருந்தியாகத்தைச் செய்துள்ளனர்.
மீண்டும் அந்தப் பாதாளத்தில் வீழ்வதற்கு மக்கள் ஒருபோதும் தயாராகவில்லை.தமது ஆட்சிக் காலத்தில் மக்களின் கோடிக்கணக்கான பணத்தை சூறையாடி தமது பொக்கற்றுக்களை நிரப்பியதோடு மட்டுமன்றி அதிகாரத்தைக் கூட தவறாகப் பயன்படுத்தி பாரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு தேசத்துக்கும், மக்களுக்கும் துரோகமிழைத்த கூட்டம் தாங்கள் தூய்மையானவர்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் எனக் கூறி மீண்டும் ஆட்சிக்கு வர பிரயத்தனங்களிலீடுபட்டு வருகின்றது.
இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் வலையில் எமது மக்கள் சிக்கி விடக் கூடாது. இது விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். கீழ்த்தரமான அரசியல் சதிகள் மூலம் மீண்டும் அதிகாரத்துக்கு வர முயற்சிப்போர் விடயத்தில் மக்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது.
இவர்களது நாடகம் ஒருபோதும் அரங்கேற முடியாது. அவர்களது கனவு ஒருபோதும் நனவாகப் போவதில்லை.தோற்றுப் போன கூட்டம் அதன் தலைமையைச் சுற்றி நின்று கொண்டு கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றது.
ஊழல், மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் ஓரணியில் திரண்டு ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு அடியும் மறு நிமிடமே பின்தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதால் இப்போது ஆத்திரமுற்று வன்முறையை கையாள முற்பட்டுள்ளனர்.
இவர்கள் தமது நாடகத்தின் அடுத்த காட்சியாக இனவாதத்தை மறைமுகமாக கட்டவிழ்த்து விடும் பணியைத் தொடங்கியுள்ளனர். இதனை ஒரு வித்தியாசமான வகையில் கையாளத் தொடங்கியுள்ளனர்.
பௌத்த சிங்களவர் மத்தியில் ஒரு கூட்டமும், தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் மற்றொரு கூட்டமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன் தலைமை இருட்டறையிலிருந்து கொண்டு அதனை இயக்கிக் கொண்டிருக்கின்றது.
நாட்டு மக்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டனர். இதற்கு மேலும் இத்தக் கூட்டம் வன்முறைக் கலாசாரத்தின் பக்கம் திரும்பினால் மக்கள் தக்க பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டார்கள்.
அந்த எச்சரிக்கையை கடந்த வாரத்தில் டாக்டர்களுக்கு மக்கள் பகிரங்கமாக அறிவித்து விட்டனர். அடுத்து வரக் கூடிய நாட்களில் அரசு சில காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்திருப்பதாக அறிய வந்துள்ளது.
ஜனநாயகத்துக்கு குந்தகம் ஏற்படக் கூடிய விதத்தில் அரசு ஊழியர்களைப் பயன்படுத்தும் ஒரு இரகசிய முயற்சியை தோற்கடிக்கப்பட்ட கூட்டம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த மாய வலையில் அரசு ஊழியர்கள் சிக்கி விடக் கூடாது. அரசைக் கவிழ்க்கும் நாடகத்தின் இறுதி அங்கமாகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனை அரசு நன்கு அறிந்து வைத்துள்ளது.இந்தச் சதி நாடகத்துக்கு சரியான பதிலடி கொடுக்க அரசும் தயாராகி விட்டது. இதனையே நேற்று முன்தினம் ஜனாதிபதி பகிரங்கப்படுத்தியுள்ளார்.
தோல்வி கண்ட அணி பாதை தவறிப் பயணிக்க முற்பட்டால் அதன் பின் விளைவுகள் அவர்களுக்கு மிகப் பாதகமானதாகவே அமையும்.
அவர்களின் தவறான முயற்சிகளுக்கு உரமூட்ட வேண்டாமென ஜனாதிபதி ஊடகங்களிடம் கேட்டிருப்பதையும் ஊடகங்கள் கவனத்தில் கொள்வது முக்கியமானதொன்றாகும்.