4-வது ஒருநாள் போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த பிறகே எதிர்பார்ப்பிற்கு இணங்க 5-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொறுக்கியது இந்திய அணி.
கிங்ஸ்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய மே.இ.தீவுகள் பேட்டிங் மீண்டும் ஒருமுறை பல்லிளித்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களையே எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அபார சதம் (111 நாட் அவுட்) மற்றும் தினேஷ் கார்த்திக் (50 நாட் அவுட்) ஆகியோரது ஆட்டங்களினால் 37 வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசியில் சேஸின் நட்பு ரீதியிலான ஒரு பந்தை விராட் கோலி, விவ் ரிச்சர்ட்ஸ் பாணியில் அனாயசமாக லாங் ஆனில் சிக்ஸ் அடித்து வெற்றி ரன்களை எடுத்தார். இந்திய அணி தொடரை 3-1 என்று கைப்பற்றியது.
இதன் மூலம் விராட் கோலி விரட்டலில் அதிக சதங்களை (18) எடுத்த சாதனையை நிகழ்த்தினார்.
ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக அஜிங்கிய ரஹானே தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த பிட்ச் போல் இல்லாமல் இது ஃபிளாட் பிட்ச், பந்துகள் அருமையாக பேட்டுக்கு ஷாட் ஆடுவதற்கு சவுகரியமாக வந்தது, இதில் மே.இ.தீவுகள் இந்திய ஸ்பின்னர்களை அடித்து நொறுக்காமல் சொதப்பியதால் 24 ஓவர்களில் 76 ரன்களையே எடுத்ததால் தோல்வி தவிர்க்க முடியாததானது.
இம்முறையும் ஷார்ட் பிட்ச் சோதனை வந்தது, ஆனால் பிட்சில் அதற்கான உதவி இல்லாததால் இம்முறை கோலி அதனை எளிதில் எதிர்கொண்டு முறியடித்தார்.
இடைப்பட்ட ஓவர்களில் ஸ்பின்னர்கள் மே.இ.தீவுகளை முடக்கினர், ஆனால் அவர்களில் கேதார் ஜாதவ் மட்டுமே விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் பந்து வீச்சை இன்னமும் அவர்கள் புரிந்து கொண்டபாடில்லை. 10 ஓவர்களில் 36 ரன்களையே அவர் கொடுத்தார், விக்கெட் இல்லை, ஜடேஜா 10 ஓவர்களில் 27 ரன்கள் விக்கெட் இல்லை, கேதார் ஜாதவ் 4 ஓவர்களில் 13 ரன்கள் ஒரு விக்கெட். மொகமது ஷமி 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மே.இ.தீவுகள் மொத்தம் 300 பந்துகளில் 187 பந்துகளில் ரன் எடுக்கவில்லை.
உமேஷ் யாதவ் தொடக்கத்தில் சரியாக வீசவில்லை, ஷாட், வைட், அல்லது லெக் திசையில் வீசுவது என்று திணறினார். இதனையடுத்து கைல் ஹோப், எவின் லூயிஸ் 8 ஓவர்களில் 39 ரன்கள் தொடக்கம் கண்டனர். பிறகு ஷாய் ஹோப்புடன் இணைந்து மேலும் 37 ரன்கள் சேர்க்கப்பட்டது. உமேஷ் யாதவ் முதல் 3 ஓவர்களில் 22 ரன்களை விட்டுக் கொடுத்ததால் பந்து வீச்சிலிருந்து கழற்றி விடப்பட்டார். மீண்டும் உமேஷை கோலி கொண்டு வந்த போது கைல் ஹோப் 2 பவுண்டரிகளை சாத்தினார், 3-வது பவுண்டரிக்கு முயற்சி செய்து அவுட் ஆனார். இதுவும் ஷார்ட் பந்துதான், ஆனால் ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனது. அடுத்த பந்தே ராஸ்டன் சேஸை யார்க்கரில் எல்.பி.செய்தார் உமேஷ். இந்தப் பந்து கிட்டத்தட்ட கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா ஹோல்டர் பந்தில் பவுல்டு ஆனாரே அது போலவே இருந்தது, இதனால் சேஸின் ரிவியூ எடுபடவில்லை.
இப்போது முதல் ஸ்பின்னர்கள் மே.இ.தீவுகளுக்கு ரன்களை மறக்கடிக்கச் செய்தனர். ஜடேஜாவுக்கு பந்துகள் திரும்பின, குல்தீப் யாதவ்வை மே.இ.தீவுகள் புரிந்து கொள்ள இன்னமும் 20-30 போட்டிகள் ஆகும் என்று தெரிகிறது, கேதார் ஜாதவ்வின் ஆஃப் ஸ்பின் (போல்) பந்துகள் திரும்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தும் மே.இ.தீவுகள் பேட்ஸ்மென்களுக்கு இந்த சூட்சமம் புரியவில்லை. 11 ஓவர்களுக்கு பவுண்டரி என்ற ஒன்று இருக்கிறது என்பதையே மே.இ.தீவுகள் மறந்தது.
ஜேசன் ஹோல்டர் இறங்கி தனது கபில்தேவ் பாணி ‘லாங் ஹேண்டில்’ பயன்படுத்தி விரைவில் ரன்களை எடுத்தார், 4 பவுண்டரிகளையும் ஹர்திக் பாண்டியாவை ஒரு சிக்சரையும் அடித்தார் அவர், ஆனால் ஷமியை நேராக அடிக்கும் முயற்சியில் லாங் ஆனில் ஷிகர் தவணிடம் கேட்ச் கொடுத்து 34 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியில் போவெலால் (31) மே.இ.தீவுகள் 200 ரன்களைக் கடந்து சற்றும் போதாத 205 ரன்களை எடுத்தது, கடந்த பிட்சில் 189 போதுமானதாக இருந்தது, ஆனால் இந்தப் பிட்சில் இது போதுமானதற்கும் குறைவான ரன் எண்ணிக்கையாகும்.
விராட் கோலி சாதனை சதம்:
ஷிகர் தவணுக்கு யாராவது தரையில் ஆடுவது எப்படி என்று கற்றுக் கொடுத்தால் நல்லது, தொடர்ந்து 2-வது முறையாக அவர் டிரைவ் காற்றில் சென்று கேட்ச் ஆனது. கடந்த போட்டியில் ஷார்ட் மிட் ஆனில் பிடித்துப் போடப்பட்டார், இம்முறை ஜோசப் பந்தை கவர் திசையில் தூக்கிக் கொடுத்தார்.
உடனடியாகவே மே.இ.தீவுகளின் ‘திரு’ ஃபீல்டிங் காட்சி கொண்டது. ரஹானேவுக்கு பாயிண்டில் பிஷூ கேட்சை விட்டார். இதனால் விராட் கோலி, ரஹானே ஜோடி 79 ரன்களைச் சேர்த்தனர்.
முதலில் ரஹானே சில பவுண்டரிகளை அடித்தது, கோலி ஷார்ட் பிட்ச் பந்துகளை தன் போக்கில் சமாளிக்க வகை செய்தது. கோலியும் மெதுவே மே.இ.தீவுகள் பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்களை இப்படி ஷார்ட் பிட்ச் சோதனை செய்ய முடியாது, நிச்சயம் ஓரிரு பந்துகள் மைதானத்திற்கு வெளியே பறந்திருக்கும், இலங்கையின் தில்ஹாரோ பெர்னாண்டோ பலமுறையும், இங்கிலாந்தின் ஆண்ட்ரூ கேடிக் 2003 உலகக்கோப்பையிலும் முன்னதாக ஷோயப் அக்தர், கார்ட்னி வால்ஷ், இயன் பிஷப், டேனி மாரிசன், மெக்ரா, வாசிம் அக்ரம், ஆலன் டோனல்டு, டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல்… உள்ளிட்டோர் சச்சினுக்கு ஷார்ட் பிட்ச் உத்தியைப் பயன்படுத்தி வாங்கிக் கட்டிக் கொண்டனர். இன்று சச்சினுடன் ஒப்பிடப்படும் விராட் கோலி அத்தகைய ஆதிக்க பேட்டிங்கை எட்ட இன்னும் கொஞ்சம் போகவேண்டும்.
மே.இ.தீவுகள் சில பவுண்டரி பந்துகளை விராட் கோலிக்கு வீசத் தொடங்கினர். குறிப்பாக பிஷூ. 67 பந்துகளில் அரைசதம் கண்ட விராட் கோலி, சிறிது நேரத்தில் நல்ல பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டத் தொடங்கினார். லெந்த் பந்துகளை கட் ஆடினார். சதத்தை 108 பந்துகளில் எட்டினார். தினேஷ் கார்த்திக்கும் இவரும் இணைந்து 91 பந்துகளில் 100 ரன்களைச் சேர்த்தனர். 3 ஆண்டுகளில் தனது 2-வது ஒருநாள் போட்டியில் ஆடும் தினேஷ் கார்த்திக் 52 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, விராட் கோலி 115 பந்துகலில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் விரட்டல் மன்னன் விராட் விரட்டலில் அதிக சதங்கள் எடுத்த சாதனையை நிகழ்த்தினார். இந்திய அணி தொடரை 3-1 என்று கைப்பற்றியது.