கனடாவின் கியூபெக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
31 வயதான தனபாலசிங்கம் எனும் குறிப்பிட்ட அந்த நபர், தனது 21 வயது மனைவியான அனுஜா பாஸ்கரனை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டிற்காக கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
Montreal குடியிருப்பு பகுதியில் இருந்து அவரது மனைவியின் சடலம் மீட்கப்பட்டதோடு சடலத்தின் கழுத்தில் 20 முறை குத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட தனபாலசிங்கம் என்பவர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு அகதியாகச் சென்று பின்னர் அந்த நாட்டில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற நபராவார். அவரது வழக்கில் ஏற்பட்ட நியாயமற்ற தாமதங்களினாலேயே அவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கனடாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியான அலெக்ஷாண்டர் வவுச்சர் இந்த வழக்கினை விசாரணை செய்ய நீண்ட காலம் எடுத்துக் கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் இந்த வழக்கு விசாரணையின் கால எல்லை கனடா உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதாகக் கருதப்பட்டது. இதன் காரணத்தால் அனைத்து விசாரணைகளும் ஏப்ரல் மாதமளவில் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையிலேயே வழக்கு விசாரணைகள் நிறைவுக்கு வந்து இன்றைய தினம் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எதுவாயினும் தனது நாடு கடத்தல் விடயத்தினை தான் விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளதாகவும் கனடா ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.