பாடசாலைக்கு வெடிகுண்டு கொண்டு வந்த குழந்தை: அதிர்ச்சியில் மூழ்கிய ஆசிரியர்கள்

ஜேர்மனி நாட்டில் உள்ள மழலையர் பாடசாலையில் பயிலும் குழந்தை ஒன்று வெடிகுண்டுடன் வகுப்பில் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஜேர்மனியில் உள்ள Darmstadt நகரில் மழலையர் பாடசாலை ஒன்று இயங்கி வருகிறது.

இப்பாடசாலையில் பயின்ற குழந்தை ஒன்று நேற்று வகுப்பிற்கு வந்த போது கைப்பையில் வெடிகுண்டு இருப்பதை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், குழந்தைகளை அவசரமாக வெளியேற்றிய ஆசிரியர்கள் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

பாடசாலைக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் வெடிகுண்டை சோதனை செய்தபோது அது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு என கண்டுபிடித்தனர்.

மேலும், குழந்தை கொண்டு வந்த வெடிகுண்டால் ஆபத்து இல்லை என்பதால் குழந்தைகள் மீண்டும் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டனர்.

வெடிகுண்டு காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்டதை அறிந்தக்கொண்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியில் உள்ள பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் 70 ஆண்டுகளுக்கு பிறகும் வெடிகுண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன.

கடந்த கிறித்துமஸ் தினத்தன்று Augsburg நகரில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 54,000 பேர் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இதே போல், கடந்த மே மாதம் Hanover நகரில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.